கோவை : குட்கா விவகாரத்தில் தி.மு.க-வினர் மீது புனையப்பட்ட வழக்குகளைக் கண்டித்தும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கோவை : குட்கா விவகாரத்தில் தி.மு.க-வினர் மீது புனையப்பட்ட வழக்குகளைக் கண்டித்தும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் பின்னர் குட்கா ஆலை தொழிலாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குட்கா ஆலை தொடர்பான விசாரணையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தக் கோரி, ஆலையின் முன்பாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த சம்பவத்தில், காவல் துறையினர் பழிவாங்கும் நோக்குடன் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், குட்கா விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும் தி.மு.க-வினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்டாலின் பேசுகையில், "குட்கா விவகாரத்தில் நியாயமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க தொண்டர்கள் மீது பழி போடும் விதமாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரவோடு-இரவாக கைது செய்து சிறையில் அடைத்தால் நாங்கள் அஞ்சி விட மாட்டோம். ஆளும் கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்கள் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். தி.மு.க ஆட்சி அமையும் போது இதற்கு பதிலளித்தே தீர வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு 'குட்கா பாஸ்கர்' என்ற பெயர் கிடைத்துள்ளது. காவல் துறை தலைமை பொறுப்பில் இருக்கும் ராஜேந்திரன் மற்றும் தற்போது ஓய்வு பெற்ற ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 லட்சம் மாமூலாக கொடுக்கப்பட்டது தற்போது கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ளது. ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச மாட்டேன். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் அதிகாரி ஒருவரை நியமித்தது. ஆனால், அவரை தமிழக அரசு மாற்றி விட்டது.

விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் மூர்த்தி அந்த மாவட்டத்தில் பணியாற்றி வருபவர். இந்த விவகாரத்தில் இருவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
தி.மு.க ஆட்சி அமையும் போது இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும். " இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.