கோவை: வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த பணம் இல்லா பரிவர்த்தனை செய்யும் வகையில் ஸ்வைபிங் மெஷினை போக்குவரத்து போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா வழங்கினார்.
கோவை: வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த பணம் இல்லா பரிவர்த்தனை செய்யும் வகையில் ஸ்வைபிங் மெஷினை போக்குவரத்து போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா வழங்கினார்.
விதிகளின் படி வாகனங்களை இயக்காதவர்களுக்கு போலீசார் அதே இடத்தில் அபராதம் வசூலிக்கின்றனர். ஒரு சில நேரங்களில் மட்டும் நீதிமன்றம் சென்று செலுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. அதே போல, அபராதம் செலுத்த வேண்டிய வாகன ஓட்டிகள் பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களை தேடி அலைய வேண்டிய சூழலும் இருந்து வருகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான எந்திரங்கள் கோவை மாநகர போலீசாருக்கு வழங்கப்பட்டது. இனி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம்.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா கூறியதாவது:-
போலீசார் கைகளில் அபராத தொகை வாங்குவதில் பல பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் ஒரு சிலர் தவறான முறையில் காவல்துறை-யை சித்தரித்து வருகின்றனர். மேலும், போலீசார் முறையாக சார்ஜ் சீட் எழுதி வாகன ஓட்டிகள் இடம் இருந்து பணம் வாங்கும் போது, அதனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கும் வகையில் பணம் இல்லா பரிவர்த்தனை செய்ய போக்குவரத்து போலீசாருக்கு 70 ஸ்வைப் மெசின் ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதில் 17 மெஷின்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள மெஷின்கள் விரைவில் வழங்கப்படும்.
இந்த பணமில்லா பரிவர்த்தனை நாளை முதல் தொடங்கும். விபத்தில்லா சாலை பயணத்தைக் கொண்டு வர பொது மக்களும் போலீசாரும் இணைந்து செயல்பட வேண்டும்.
'நோ ஆக்ஸிடண்ட் டே'
"நோ ஆக்ஸிடண்ட் டே" என்ற ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளோம். அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. அவ்வாறு அறிமுக நாள் அன்று எந்த வித வழக்கும் பதிவு செய்யப்படாது. இதன் மூலம் விபத்துகளைத் தடுக்க முயற்சிப்போம்.
இந்த ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாதத்தில் மட்டும் 97 பேர் சாலை விபத்தில் மரணமடைந்தனர். இந்த ஆண்டு 35 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். இப்படி கோவை மாநகரில் சாலை விபத்து குறைந்து கொண்டே செல்கிறது. இப்படியே கடை பிடித்தால் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தலாம் என்றார்.
போக்குவரத்து அபராத முறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரித்து ரொக்கமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தும் இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ளது.