கோவை: மேட்டுப்பாளையத்தின் மலையடிவார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் இரவு நேரத்தில் நடமாடும் மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தின் மலையடிவார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் இரவு நேரத்தில் நடமாடும் மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு, தாயனூர், மேடூர், பணப்பாளையம் போன்ற மலையடிவார கிராமங்களில் நடமாடி வரும் மர்ம விலங்கால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் இவ்விலங்கு அவ்வப்போது விவசாய தோட்டங்களில் உள்ள பட்டிகளில் அடைத்து வைக்கப்படும் ஆடுகளைக் கொன்றுவிடுவதாக தெரிவிக்கும் கிராமத்தினர், அச்சமயங்களில் எதிர்படும் மனிதர்களையும் விரட்டுவதாகவும் கூறுகின்றனர். இது சிறுத்தையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள செந்தில்குமார் என்பவரது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த இந்த மர்ம விலங்கு தோட்டத்திற்குள் இருந்த அவரை விரட்டியுள்ளது. ஓடி சென்று உயிர் தப்பிய செந்தில்குமார் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அவரது தோட்டத்தில் பதிந்துள்ள மிருகத்தின் கால்தடத்தை ஆய்வு செய்து, இக்கால்தடம் சிறுத்தையுடையதல்ல என்றும் வேறு ஏதேனும் விலங்காக இருக்கலாம் என்றனர்.

மேலும், அத்தோட்டத்தில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்திச் சென்றுள்ளனர். சிறுத்தை போன்ற உடலமைப்புடன் ஊருக்குள் நுழையும் இவ்விலங்கின் நடமாட்டத்தால் பகல் நேரங்களில் கூட தோட்டங்களில் விவசாய பணிகளை செய்ய அச்சப்படுவதாகவும், மாலை நேரத்திற்கு பின் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாகவும் கூறும் இப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினர் இப்பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.