கோவை : கச்சா எண்ணெய்யின் விலை 140 டாலராக இருந்தபோது ரூ. 65ஆக இருந்த பெட்ரோல் விலை, தற்போது 65 டாலராக உள்ளபோது ரூ. 77 ஆக உயர்ந்துள்ளதாகப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : கச்சா எண்ணெய்யின் விலை 140 டாலராக இருந்தபோது ரூ. 65ஆக இருந்த பெட்ரோல் விலை, தற்போது 65 டாலராக உள்ளபோது ரூ. 77 ஆக உயர்ந்துள்ளதாகப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- காங்கிரஸ் ஆட்சியில் 140 டாலராக கச்சா எண்ணெய் விலை இருந்தபோது. பெட்ரோல் ரூ. 65ஆகவும், டீசல் ரூ. 55 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 65 டாலராக கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும், பெட்ரோல் ரூ. 77 ஆகவும், டீசல் ரூ. 68 என உயர்ந்துள்ளது.
மக்களின் பணமான ரூ. 2 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளை அடித்து எடுத்துக்கொள்கிறது. பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கொதித்து போயுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மோடியே, சவக்குழியை வெட்டிக்கொள்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 9% என்கிற வளர்ச்சி 6 சதவிகிதமாக தற்போது குறைந்துள்ளது.
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற எடியூரப்பாவிற்கு கர்நாடக தேர்தலில் பா.ஜ.க., வாய்ப்பளித்துள்ளது. பா.ஜ.க.,வின் இரட்டை வேடத்தையும், மோடியின் முகத்திரையையும் கிழிப்பது போன்று கர்நாடக தேர்தல் முடிவுகள் வரும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளபோதிலும், புதுச்சேரி மக்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். காவிரி விவகாரத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைப் பிரதமர் வஞ்சிக்கிறார்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என 2 ஆண்டுகளாக நாங்கள் கேட்டு வருகிறோம். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநர் கிரண்பேடி எதுவும் செய்யாத நிலையில் தான், முதலமைச்சரான பிறகு நிர்வாகம், கல்வி, சட்டம் ஒழுங்கு போன்ற பல்வேறு துறைகளில் புதுச்சேரி முதன்மையான இடத்தை ஆளுநரின் தொல்லை மீறிப் பெற்று வருகிறேன்.
தமிழகத்திலும் இதே நிலை தான் உள்ளது. பா.ஜ.க.,வால் காலூன்ற முடியாது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஆளுநரை வைத்து ஆதிக்கம் செலுத்த பிரதமர் நினைக்கிறார். இன்னும் 6 மாதங்களில் நரேந்திர மோடி காணாமல் போய்விடுவார். சமையல் எரிவாயு மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மானியங்களைப் பா.ஜ.க., ரத்து செய்து நாட்டை குட்டிச்சுவராக்கும் பணியை மோடி செய்து வருகிறார்," இவ்வாறு அவர் கூறினார்.