கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சீலியூரில் 108 ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டரில் இருந்து வெளியேறும் ஆக்ஸிஜனால், முழுமையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சீலியூரில் 108 ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டரில் இருந்து வெளியேறும் ஆக்ஸிஜனால், முழுமையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
108 ஆம்புலன்ஸ்கள்
கோவை மாவட்டத்தில் மொத்தம் 37, அவசர சேவை (108) ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில், 29 பெரிய ஆம்புலன்ஸ்களும், 3 இரண்டு சக்கர வாகன ஆம்புலன்ஸ்களும், 3 ஜீப் ஆம்புலன்ஸ்களும், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்களும் (பொள்ளாச்சி மற்றும் கோவை) உள்ளது.
கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி சீலியூர், பட்டிசாலை கோபனாரி, தோலம்பாளையம், மேல்பாவி, காலனிப்புதூர், கோலப்பதி, சீங்குழி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. அதேபோல, மலைமேலே மானார், அத்திகடவு, சுரண்டை, நெல்லிமரத்தூர், நீலாம்பதி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இங்கு மொத்தமாக 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில், இந்த சீலியூர் மற்றும் அதை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால், மலைவாழ் மக்களும் அடிக்கடி ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். அதேபோல, இந்தப் பகுதிகளில் முறையான அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் பிரசவகாலம் மற்றும் அவசர நேரங்களில் சீலியூரில் உள்ள சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெருவர். பின்னர், மேல்சிகிச்சை மற்றும் ஆபத்தான சூழல் வரும் போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கோ அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கோ கொண்டு செல்லப்படுவர். இப்படி, இங்கு ஆபத்தான நிலையில், உள்ள நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல 108 அவசர சேவை பயன்படுத்தபட்டு வருகிறது.

கசியும் ஆக்ஸிஜன்கள்
கடந்த சில நாட்களாக சீலியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் -TN 32 G 0986 என்ற நம்பரைக் கொண்ட 108 ஆம்புலன்ஸில் இருந்து உயிர் காக்கும் ஆக்ஸிஜனானது கசிந்து வருகிறது. இதனால், நோயாளிகளுக்கு முழுமையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
இதனால், உயிரிழக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. அதேபோல, நோயாளிகளின் உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் பெரும் துன்பத்தை அடைந்து வருகின்றனர். அதேபோல, இந்த ஆம்புலன்ஸில் சைரனின் சத்தமும் குறைவாக உள்ளது. எனவே, நோயாளிகளைக் குறித்த நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

ஆக்ஸிஜனின்றி உயிரிழப்பா..?
கடந்த 20-ம் தேதியன்று 108 ஆம்புலன்ஸில் சீலியூர் அருகே உள்ள பகுதியில் இருந்து அன்னூர் அரசு மருத்துவமனைக்கு விபத்தில் காயமடைந்த இரண்டு நபர்களை அழைத்து சென்றனர். அதில், ஒருவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதில், இறந்த நபர் ஆக்ஸிஜன் முழுமையாகக் கொடுக்காததால் தான் இறந்தார் என குற்றம்சாட்டினால், மருத்துவக்குறைகள் தங்களுக்கு எப்படி தெரியும் என உண்மையைப் பொய்யாக்கி விட முடியும். ஆனால், இந்த சம்பவத்தில் சாமானியனுக்கும் ஒரு கேள்வி எழுகிறது. ஆபத்தான நிலையில் வரும் நோயாளிக்கு முதலில் அவசியமானது ஆக்ஸிஜன். அதேபோல, ஆபத்தான நிலையில் வரும் நோயாளிக்கு ஆக்ஸிஜன் கொடுக்காவிட்டாலும் விரைவில் மரணமடையும் நிலை உள்ளதல்லவா..? இந்த கேள்விக்கான பதிலாகக் கூட இவரின் மரணம் இருக்கலாம்.

இந்த சீலியூரில் உள்ள 108 ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் (O2) சிலிண்டரில் இருந்து வரும் குழாயிலிருந்து ஆக்ஸிஜன் வெளியேறுவதால் இரண்டு லிட்டர் அளவுக்கு தான் பயன்பட்டது. ஆனால், மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து, மரணமடைந்த நோயாளிக்கு முழுமையாக, அதாவது இந்த சிலிண்டரில் உள்ள 16 லிட்டர்கள் வரை கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால், குறைந்த அளவு கொடுத்ததால் தான் இவர் உயிர் இழந்துள்ளாரா..? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.
இதனால், ஆக்ஸிஜன் கசிவை உறுதிப்படுத்தும் விதமாக, நாம் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட மேலாளர் (ஆப்ரேஷன்) முத்து கிருஷ்ணனிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது ;- எங்களிடம் ஆக்ஸிஜன் (O2) இருக்கிறது. நாங்கள் முறையாக ரீப்பில் செய்து வருகிறோம். நாங்கள் விசாரித்ததில் குழாயில் இருந்து மட்டும் ஆக்ஸிஜன் கசிவு ஆகிறது என்றார். அதை சரி செய்ய நாங்கள் முறையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதேபோல, பீரியாடிக் மெயிண்டனஸும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் (O2) கசிவு ஆவதை சரி செய்திடுவோம். அதுவரை அவசர நோயாளிகளைக் கொண்டு செல்ல "மேட்டுப்பாளையம் ஆம்புலன்ஸை பயன்படுத்துவோம்" எனக் கூறினார்.
ஆனால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் அன்னூர் மருத்துவமனையில் இருந்து தினமும் நான்கு முதல் ஐந்து நோயாளிகளை, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். இதனால், மேட்டுப்பாளையம் பகுதியில் அவரச உதவிக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பொதுமக்கள் தத்தளிக்கின்றனர். இதனால், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் துடியலூரில் இருந்து ஆம்புலன்ஸ்கள் செல்கிறது. இப்படி மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கே அவசர நிலைக்கு காலதாமதம் ஆகும் 108 ஆம்புலன்ஸ், எப்படி சீலியூர் மக்களின் அவசர தேவையை பூர்த்தி செய்யும். "மேட்டுப்பாளையம் ஆம்புலன்ஸை கொண்டு சீலியூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்வோம்" என்று அதிகாரிகள் சொல்வது பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத காரியமாக உள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம். ஜெயக்குமார் (சமூக ஆர்வலர்) கூறியதாவது:- மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளுக்கு சுமார் 3 அல்லது நான்கு முறை நான் 108 ஆம்புலன்ஸ்க்கு அவசர உதவிக்காக அழைத்திருப்பேன். இதில், அழைத்த முறையெல்லாம் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை தாமதம் ஆகியுள்ளது. இதனால், அவசர உதவிக்கு தனியார் ஆம்புலன்ஸை நாடும் நிலை மேட்டுப்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க மேட்டுப்பாளையம் 108 ஆம்புலன்ஸை சீலியூருக்கு பயன்படுத்துவோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது, என்றார்.
அரசுக்குக் கோரிக்கை
பொள்ளாச்சி சுங்கம் 108-ஆம்புலன்ஸ், கடந்த மாதம் 18-ம் தேதியன்று பொள்ளாச்சியில் உள்ள சிங்காநல்லூர் அருகில் தீ பிடித்தது. இத்தனைக்கும் இந்த வாகனம் 30,000 கி.மீ தான் ஓடியுள்ளது. இருந்தும் தீப்பிடிக்கக் காரணம் முறையான பராமரிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

முறையான பராமரிப்புகள் குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறும்போது:- நாங்கள் இந்த வேலையை வெறும் சம்பளத்திற்காக செய்யவில்லை. பொதுமக்களுக்கு செய்யும் சேவையாக செய்கிறோம். இங்கு எத்தனையோ தொழிலாளர் விரோதப்போக்கு இருந்தும், இங்குப் பணி செய்யக் காரணம் உயிர்காக்கும் தொழில் என்பதால் மட்டும் தான். ஆனால், இந்தச் சேவையே மரணத்தின் வாசலாய் இருப்பது வேதனை அளிக்கிறது. 108 ஆம்புலன்ஸ் கடந்த சில நாட்களாக சரியாக பழுது பார்க்கப்படுவதில்லை. இந்த சீலியூர் ஆம்புலன்ஸிலேயே அதிகாரிகளிடம் ஆம்புலன்ஸில் சைரன் சத்தம் குறைவு, ஆக்ஸிஜன் கசிவு போன்ற குறைகளை தெரிவித்தோம். ஆனால், இன்னமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை, என அவர்கள் கூறினர்.

பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சேவை ஊர்தியில், இதை நடத்தும் தனியாரின் அலட்சியங்களால் தொடர்ந்து பல புகார்கள் வருகிறது. ஆகவே, அரசே இந்த நிறுவனத்தை ஏற்று நடத்தி மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.