கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், தார் சாலைகள் போல் இருப்பதாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா குற்றம்சாட்டியுள்ளார்
கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், தார் சாலைகள் போல் இருப்பதாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகளை கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தி வருகிறது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இதில், கேரள அணி சார்பாக பங்கேற்கும் ஒரு அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் தடகள வீராங்கனையும், இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பி.டி. உஷா நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், 10 வருடத்திற்கு முன்பு போடப்பட்டது. அது தற்போது தார்சாலை போல் உள்ளது. ஓரிரு நிகழ்வுகளில் பங்கேற்கும் போது பிரச்சனை எதுவும் இல்லை. கூடுதல் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குப் போட்டிகளுக்கு முன்பாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கான போதிய வசதிகள் இல்லை," என அவர் குற்றம்சாட்டினார்.