கோவையில் தனிநபர் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சகோதரர்கள் இருவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன
கோவையில் தனிநபர் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சகோதரர்கள் இருவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வரும் ரவிசங்கர், சங்கீதா தம்பதியினரின் மகன்கள் ப்ரனவ் (14), ப்ரித்திவ் (10). இவர்கள் இருவரும் தங்களது தனி திறமைகளில் மூன்று உலக சாதனையை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வைசியாள் வீதியில் உள்ள வாசவி கலையரங்கில், உலகிலேயே அதிகநேரம் தொடர்ந்து விரிவுரையாற்றும் நிகழ்ச்சியை மாணவன் ப்ரனவ் இன்று காலை முதல் துவக்கியுள்ளார். சாதனை விதிகளின்படி, 14 மணி நேரம் தொடர்ந்து பாடம் கற்பிக்கப்பட்டால் அது உலக சாதனையாக அங்கீகரிக்கப்படும். சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் உள்ள பதினாறு அத்தியாயங்களில், ஆறு அத்தியாயங்களை முழுமையாகப் படித்து இந்த உரையைத் துவக்கியுள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.40 மணியளவில் தனது விரிவுரையை நிறைவு செய்து சாதனைப் படைக்க உள்ளார்.

இரண்டாவது நிகழ்வாக நாளை மதியம் ஒரு மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரம் மிருதங்கம் வாசிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளார். இதன்மூலம், உலகிலேயே அதிக நேரம் தொடர்ந்து மிருதங்கம் வாசித்தவர் (மைனர்-ஆண்) என்ற சாதனையையும் அவர் நிகழ்த்த உள்ளார். இதேபோல, இவரது, சகோதரர் ப்ரித்திவ், 'மரங்களைக் காப்போம்' என்ற தலைப்பில் 9 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான பென்சில் பாக்ஸ் கொண்டு 36 சதுர மீட்டர் அளவிலான ஓவியத்தை வரைந்து வருகிறார். இதற்கு, காலக்கெடு எதுவும் இல்லாத நிலையில், 10 முதல் 12 மணி நேரத்தில் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு மாணவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் இவர்களது சாதனை எலைட் வோல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கர்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கர்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ரெக்கார்ட் செட்டர் மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் ஆய்வுக்கு வழங்கப்படும். சிறுவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற கோவை மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.