கோவை: போதைப் பொருள் என்பது அற்பமான மகிழ்ச்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மனிதர்களால் உட்கொள்ளப்படுகின்றது. இந்த பழக்கம் ஆரம்பத்தில் இயல்பாக தோன்றினாலும், போக-போக மனிதனை அடிமையாக்கிவிடுகிறது. இந்த பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனி மனிதன், குடும்பம், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கோவை: போதைப் பொருள் என்பது அற்பமான மகிழ்ச்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மனிதர்களால் உட்கொள்ளப்படுகின்றது. இந்த பழக்கம் ஆரம்பத்தில் இயல்பாக தோன்றினாலும், போக-போக மனிதனை அடிமையாக்கிவிடுகிறது. இந்த பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனி மனிதன், குடும்பம், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தூக்க மாத்திரை
தூக்க மாத்திரை என்பது மூளையில் மெலடோனின் உற்பத்தியை தூண்டுவது. மெலடோனின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதோடு இதன் வேலை முடிந்துவிடுவதில்லை. மாறாக, பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமானது, தலை சுற்றல், அடிக்கடி தலைவலி, குழப்பங்கள், எரிச்சல், மன அழுத்தம், அதிக கோபம் போன்றவை.
மிக நீண்ட காலமாக நீங்கள் மெலடோனின் சுரக்க தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அதுவே பழக்கமாகிவிடும். இயற்கையாக மெலடோனின் சுரப்பதை விட்டு, மாத்திரைகளால் மட்டும் அது சுரக்கும் நிலை ஏற்படும். பின்னர், மாத்திரை இல்லாமல் தூக்கம் வராத சூழலும் உருவாகும் .
கோவை
தமிழகம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட சில்லறை மருந்துக் கடைகள் உள்ளது. சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஆனால், ஒரு சில கடைகளில் மருத்துவ பரிந்துரை சீட்டுக்கள் இல்லாமலேயே மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு மருந்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் நோக்கமும் தவறாக உள்ளது.

இந்த குறிப்பிட்ட மருந்து வணிகர்கள், போதைப் பொருளுக்காக ஏங்கும் நபர்களுக்காக சட்டத்தை மீறி பணம் சம்பாதிக்கும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். கோவையில் உள்ள பல்வேறு மருந்து கடைகளில் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால், ஒரு சில கடைகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மனநோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாத்திரையை கோவை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பது
கோவை அரசு மருத்துவமனையில் அடிக்கடி மயக்க மருந்துகள் மாயமாகி வருகிறது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடமும் மருத்துவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இரவு நேரங்களில் 'போர்ட்வின்' என்ற மயக்க மருந்தை குறிவைத்து திருடிச் செல்கின்றனர். இந்த போதை ஒரு நாள் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. பணம், தங்கம் மற்றும் வைரத்தைப் பாதுகாத்து வைப்பது போல, தற்போது நோயாளிகளின் இன்றியமையாத மருந்துகளும் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மாத்திரை
'நைட்ரோசன், நைட்ரெஸ்ட், நைட்ரோவீட்' போன்ற மாத்திரைகளை தான் இளைஞர்கள் போதைக்காக அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகள் மருந்துக்கடைகளில் மன நோயாளிகளின் மன ஓய்வுக்காக கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை போதை பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகளை விற்பனை செய்ய உரிய வரைமுறைகள் வேண்டும். ஆனால், வரைமுறைகளைத் தாண்டி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சில மருந்து விற்பனையாளர்கள் சமுதாயத்தை கெடுத்து வருகின்றனர். இதனால் போதை பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து போதை மாத்திரை பயன்படுத்தும் ஒருவர் கூறுகையில், "நான் சுமாரா ரெண்டு வருசமா போதை மாத்திரை சாப்பிடுகிறேன். என்னால் ஒரு நாள் கூட மாத்திரை (டேபி) சாப்பிடாம இருக்க முடியாது. மாத்திரை கிடைக்கலைன்னா, ரொம்பா கோவம் வரும். யாரை பாத்தாலும் எரிச்சல் ஏற்படும். பதட்டமா இருக்கும்.

அதே போல, ஆரம்பத்தில் இரண்டு மாத்திரை சாப்பிட்டேன், அப்பறம் போக-போக மூனு, நாலுன்னு அதிகமாயிடுச்சு. யார் மேலயாச்சும் கோவமா இருந்தேன்னா மாத்திரை போட்டதக்கு அப்புறம் கைல சிக்குனா அவ்வள தான். கோபத்தை கன்ட்ரோல் பன்னவே முடியாது. இந்த மாத்திரை போட்டா வாய் வரண்டு தான் இருக்கும். இனிப்பு அதிகமாக சாப்பிட தோனும். பார்த்தால் போதையில் இருப்பது தெரியாது. இப்ப பாத்தா என்ன தெரியுதா?" என்று போதையில் அடுக்கடுக்காய் அதிர்ச்சி கொடுத்தார்.
இளைஞர்கள் கைது
சமீபத்தில் கோவையில் ஒரு மருந்துக் கடையில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரை சீட்டை போலியாக தயாரித்து மூன்று இளைஞர்கள் போதை மருந்து வாங்க முயன்றனர். பலமுறை அதே கடையில் மருந்து வாங்கியுள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த விற்பனையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கு சென்ற சிங்காநல்லூர் போலீசார் 19 வயதுடைய மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.
இது குறித்து போதை மாத்திரையில் இருந்து மீண்டு வந்த ஒருவர் கூறுகையில், "இந்த டேபி போதைல 10 வருசமா மாட்டிட்டு இருந்தேன். இதனால் பல பிரச்சனைகளை அனுபவிச்சன். என் கூட இருக்கும் நண்பர்களையே அடிப்பன். இதனால எல்லாம் என்னை கிருக்கன்னு சொல்லி ஒதுக்கினார்கள். அப்பவும் நான் திருந்தல. மாத்திரை சாப்பிடர பழக்கம் உள்ள நண்பன் கூட சேர்ந்து இன்னும் அதிகமா மாத்திரை சாப்பிட்டேன். எனக்கு டேபி போதைல இருந்து வெளிவரனும் என்ற ஆசை இருந்துச்சு. ஆனால், வர முடியல. கொஞ்சம் உடம்பு சரியில்லாம ஆயிருச்சு. அடிக்கடி பிக்ஸ் வந்துச்சு. இதனால ரொம்ப கஷ்டப்பட்டேன். அதுக்கபறம் டாக்டர பாத்து இப்ப போதை பழக்கத்தில் இருந்து வெளியில வந்து நிம்மதியா வாழுறேன்" என்றார்.
கட்டுப்பாடுகள் தேவை
மன நோயாளிகள் மன அமைதி பெறவும், தூங்குவதற்காகவும் பயன்படுத்தும் மருந்துகளை, மருந்துக் கடைகளில் விற்பனை செய்வதை முறைப்படுத்த வேண்டும். இதை கட்டுப்படுத்த, தனி பரிந்துரை சீட்டு மூலம் குறிப்பிட்ட மருந்துக்கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
இதுகுறித்து, மனநிலை மருத்துவர் எஸ்.ஆனந்த கூறியதாவது:-
வலி நிவாரணி மருந்துகள் மற்றும் மன நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை இளைஞர்கள் தவறாக போதைக்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இது போன்ற செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இந்த மாத்திரைகள் மனித மனதையும், உடலையும் அடிமையாக்கிவிடும். குறிப்பிட்ட மாத்திரைகளை அனைத்து மருந்து கடைகளிலும் விற்பதைத் தடுக்க அரசு முன் வரவேண்டும். வலி நிவாரணி மருந்துகளான 'மார்ஃபீன் (Morphine), ஃபெண்டென்ல் (Fentanyl)' போன்ற மாத்திரைகளில் 'ஹெராயினின் வேதி பொருட்கள்' இருப்பதால் இந்த மருந்துகள் வாங்க தனி பரிந்துரை சீட்டு தேவைப்படுகிறது. இந்த மருந்துகளை தனி தகுதியுடைய மருத்துவர்கள் மட்டுமே பரிந்துரை செய்யமுடியும்.

குறிப்பாக மருத்துவமனைகளில் மட்டுமே நோயாளிகளின் பயன்பாட்டுக்கு உள்ளது. இதன் பயன்பாடுகள், இருப்புகள் ஆகியவை உரிய முறையில் கண்காணிக்கப்படுகிறது. இதை போல மனநோயாளிகள் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளையும் முறைப்படுத்தினால் இளைஞர்கள் கைகளுக்கு தவறாக போவதை நாம் கட்டுப்படுத்தலாம்." என்றார்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மாநில இணை செயலாளர் திருநாவுக்கரசு கூறியதாவது:-
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கொடுப்பது இல்லை. அதுவும் நீங்கள் கூறும்படி, மன நோயாளிகள் மருந்தை யாராவது பரிந்துரை சீட்டு இல்லாம கேட்டால் கொடுப்பது இல்லை. மாறாக அறிவுரை செல்லிதான் அனுப்புகிறோம். ஒரு வேளை ஏதாவது மருந்து கடை சமுதாயத்தைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டால் அவங்கள எந்த நிபந்தனையும் இன்றி சங்கத்தை விட்டு வெளியேற்றி, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க நாங்களே முன் வருவோம்" என்றார்.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா கூறியதாவது:-
கோவையில் இது போன்று மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்ய கூடாது என்று மெடிக்கல் அசோசியேசனுக்கு வலியுறுத்தி உள்ளோம். தவறான முறையில் பணத்திற்காக சட்ட விரோதமாகச் செயல்பட்டால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். போதை பொருள் தடுப்பு போலிசார் இந்த சட்ட விரோத விற்பனைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அப்படி சட்ட விரோதமாக விற்பனை செய்தால் கடையின் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிகாரிகள் ஸ்டாக்குகள் குறித்து முறையாகக் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் இது போன்ற சட்ட விரோதங்களைத் தடுக்க காவல் துறைக்கு உதவ வேண்டும்." என்றார்.

சட்டவிரோதமாக மருந்துகள் விற்பனை செய்வது தொடர்பான குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சந்திரசேகர். " சட்ட விரோதமாக மருந்து வினியோகம் செய்தால் நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்றார்.
உயிர் காக்கும் மருந்துகளை உயிரை அழிக்கும் போதை பொருளாகப் பயன்படுத்துவது கொடூரமான செயல். இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டும் இல்லை ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமே உண்டு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.