கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் உள்ள கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.
கோவை : கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் உள்ள கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.

காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி. கல்லூரிக்குப் பின்புறம் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான சந்திரா கழிவு பஞ்சு குடோன் உள்ளது. இதில், இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது, பஞ்சு குடோன் என்பதால், மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கபட்டதைத் தொடர்ந்து, பீளமேடு, கணபதி, தெற்கு தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து குறித்து உரிமையாளர் ஸ்ரீராம் தெரிவிக்கையில், ''1,500 டன் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும்.'' என்றார்.