பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து பிப்ரவரி மாதத்திற்கான முன்னறிவிப்பு

விவசாயப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி மாதத்திற்கான முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கோவை : விவசாயப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து  பிப்ரவரி மாதத்திற்கான முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

நெல்

நெற்பயிரில் தற்போது இலைசுருட்டுப்புழு மற்றும் குருத்து பூச்சியின் தாக்குதல் பரவலாக தென்பட்டுள்ளது. நெல் பயிரிடும் தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தர்மபுரி,  திருவாரூர் மற்றும்; கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் குறைவான சேதநிலை உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதன் தாக்குதல் அதிகம் தென்படும் போது பூச்சிக்கொல்லிகளான குளோர்பரிபாஸ் 500 மி.லி அல்லது கார்டாப் 400 கிராம் அல்லது குளோரான்ட்ரினிலிபுரோல் 60 மி.லி ஏக்கருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம். திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நெல்லில் பச்சை தத்து பூச்சிகளின் தாக்குதல் தென்படுகிறது. இது துங்ரோ வைரஸ் நோயை பரப்பும் என்பதால் வயலில் துங்ரோ நோயின் அறிகுறிகள் தென்படுகிறதா என தெரிந்து கொள்ள வேண்டும். வயலில் விளக்கு பொறி வைத்து பச்சை தத்தும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். இப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமானால் இமிடாகுளோபிரிட் 60 மி.லி அல்லது டிரைசோபாஸ் 300 மி.லி தெளிக்க வேண்டும்.

நெல் குலை நோய் தாக்குதல் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.   நெல்லில் வெடிப்புக்கான அறிகுறிகளான வெளிர்பச்சை நிறம் கொண்ட வெள்ளை சுழல் வடிவ புண்கள் தோன்றும். பழைய காயங்கள் சாம்பல் வெள்ளை நிறமாக சிதைவுண்டு காணப்படும்.  விவசாயிகள் டிரைசயிக்ளசோல் 75 டபள்யு பி 200 கி, ஏக்கர் அல்லது கார்பன்டாசிம் 50 டபள்யு பி 200 கி, ஏக்கர் மருந்தினை அறிகுறி தென்பட்டவுடன் தெளிக்கவும். விவசாயிகள் நெல்லின் மேலாண்மைக்கு உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.

பயறு 

சாம்பல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் உளுந்து மற்றும் பச்சைபயறு பயரிடப்படும் மாவட்டங்களில் ஏற்படலாம். சாம்பல் நோயைக்கட்டுப்படுத்த புரோபிகோனசோல் என்ற மருந்தை ஹெக்டருக்கு 500 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். மேலும், இலைப்புள்ளி நோயைக்கட்டுப்படுத்த ஹெக்டருக்கு கார்பன்டாசிம் 500கி அல்லது மான்கோசெப் 1000கி என்ற மருந்தை தெளிக்க வேண்டும். துவரையை வாடல் மற்றும் மலட்டுத் தேமல் நோய் தாக்க வாய்ப்புள்ளது. வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். மலட்டுத் தேமல் நோயை கட்டுபடுத்த பினாசாகுயின் 1 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும.;      

பருத்தி

பருத்தியில் தயிர்புள்ளி நோய் மற்றும் ஆல்டர்னரியா இலைப்புள்ளி நோய் தாக்குதல் பெரம்பலூர், கோவை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் காணப்படுகிறது. தயிர்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது புரோப்பிகோனசோல்1 மில்லி லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். மேலும், பருத்தியில் ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த அமன்கோசெப் அல்லது தாமிர ஆக்ஸிகுளோரைடு 2 கிராம் லிட்டர் மருந்தை நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்குமாறு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கரும்பு

ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிரில் வெள்ளை கம்பளி அசுவனி பூச்சி தாக்குதல் தென்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த இயற்கையாக வயலில் உள்ள இரைவிழுங்கிகளான டைபா புழுக்கள் மற்றும் பழுப்பு கண்ணாடி இறக்கை பூச்சிகளை பாதுகாக்குமாறு விவிசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு இரசாயன பூச்சிகொல்லி மருந்துகளையும் தெளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.




மாதத்துப் பூச்சி

கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாதத்துபூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு டைமீத்தோயேட் 1.6 மில்லி கலந்து பூக்கும் தருவாயிலும் மற்றும் இரண்டு வாரம் கழித்து மீண்டும் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

வாழை

வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல் கோவை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கார்பன்டாசிம்  0.1 சதவீதம் (1 கிராம் லிட்டர்) அல்லது மான்கோசெப் 0.2 சதவீதம் (2 கிராம் லிட்டர்) அல்லது ப்ரபிகெனசோல் 0.1 சதவீதம் (1 மி.லி, லிட்டர் மற்றும் ஒட்டுந்திரவமான டீப்பால் சேர்த்து 3 முறை 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதியில் தெளிக்கவும். பியூசேரியம் வாடல் நோயை கட்டுப்படுத்த கிழங்குகளை கார்பன்டாசிம் 2 கி,லிட்டர் கரைசலில் 30 நிமிடம் நனைத்து நடவு செய்யவும். மரத்தின் 3, 5 மற்றும் 7 ஆம் மாதத்தில் கார்பன்டாசிம் 2 விழுக்காடு (20 கி,லி) கரைசல் தயாரித்து 3 மி.லி யை கிழங்கினுள் ஊசி மூலம் செலுத்தவும்;. நோய் தாக்கப்பட்ட மரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற வாழை மரங்களுக்கும் கார்பன்டாசிம் (1 கி,லிட்டர்) தயாரித்து மரத்தை சுற்றி 2, 4 மற்றும் 6 ஆம் மாதத்தில் ஊற்ற வேண்டும்.

பப்பாளி மாவுப்பூச்சி

தற்பொழுது தாக்குதல் நிலவி வரும் வானிலை சூழலில் மரவள்ளி, பப்பாளி மற்றும் பூ செடிகளில் பப்பாளி  மாவுப்பூச்சி தாக்குதலை கண்காணித்து  தேவைப்படின் அசிரோபேகஸ் என்ற ஒட்டுண்ணியை தோட்டங்களில் விட்டு கட்டுப்படுத்தலாம்.

தண்டு அழுகல் அல்லது தூர் அழுகல் நோய்

பப்பாளியில் தண்டு அழுகல் அல்லது தூர் அழுகல் நோய் தாக்குதல் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தென்படுகிறது. ஐந்து மாதத்திற்கு மேல் வளர்ந்த செடிகளுக்கு 1 சதவீத போர்டோக் கலவையை மரத்தைச் சுற்றி வேர்கள் நனையுமாறு மரம் ஒன்றுக்கு 1-லிருந்து 2 லிட்டர் வரை ஊற்றலாம்.  வடிகால் வசதியை நன்றாக அமைக்க வேண்டும். மெட்லாக்ஸ்ஸல் 2 கிராம், லிட்டர் என்ற விதத்தில் 2-4 முறை 15 நாட்கள் இடைவெளியில் செடியைச் சுற்றி ஊற்றலாம்.

வளையப் புள்ளி வைரஸ் நச்சுயிரி நோய்

பப்பாளியில் வளையப் புள்ளி வைரஸ் நச்சுயிரி நோய் தாக்குதல் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த நடவு செய்வதற்கு 1 மாதத்திற்கு முன்பு இரு வரிசைகளில் மக்காச்சோள பயிரை தோட்டத்தைச் சுற்றி நடவும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறியை ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். மேலும், லிட்டருக்கு வேப்பெண்ணெய் 1 மி.லி (அல்லது) அசிபேட் 1.5 மி.லி (அல்லது) இமிடாக்ளோபிரிட் 0.75 மி.லி என்ற அளவில் கலந்து நடவிலிருந்து நான்கு மாதம் வரை 1 மாத இடைவெளியில் தெளிக்கவும். நட்ட நான்காவது மற்றும் ஏழாவது மாதத்தில் 5 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 1 கிராம் போரிக் அமிலம் 1 லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

காய்கறிப் பயிர்கள்  

தக்காளி

தக்காளியில் காயப்புழுக்களின் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொரி ஏக்கருக்கு 6 என்ற எண்ணிக்கையில் வைத்தல் மற்றும் டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 2 என்ற எண்ணிக்கையில் பூக்கும் தருணம் முதல் தோட்டங்களில் வெளியிடுதல் பொருளாதார சேத நிலை தாண்டும்பட்சத்தில் 1 லிட்டர் நீருக்கு அசாடிராக்டின் 2 மில்லி அல்லது இன்டாக்ஸிகார்ப் 0.5 மில்லி லிட்டர் அல்லது புளுபென்டிஅ[மைடு 0.5 கிராம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இலைப்பேன், வெள்ளை ஈக்கள் மற்றும் காய்ப்புழுக்கள்

தற்பொது நிலவி வரும் வானிலை சூழலில் தக்காளியில் இலைகள் மற்றும் வெள்ளை ஈக்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த டைமீத்தோயேட் 2 மிலி, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். ஒரு சில இடங்களில் காய்புழுவின் தாக்குதல் ஆரம்ப நிலையில் உள்ளதால் இனக்கவர்ச்சி பொறி கொண்டு கண்காணித்தும், நோவலூரான் 2 மில்லி, 1 லிட்டர்  தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

முன்பருவ இலைக்கருகல்

• தக்காளி பயிரிடும் பகுதிகளில் பெருவாரியாக காணப்படுகிறது.

• இந்நோயை கட்டுப்படுத்த பயிர் குப்பைகளை அகற்றி அழிக்க வேண்டும்.

• திறம்பட நோயைக் கட்டுப்படுத்த மேகோசெப் (2கி.லி) அல்லது குளோரோதளானில் (2கி,லி) (அ) புரோப்பினேப் (2கி,லி) (அ) காப்பர் ஹைட்ராக்சைடு (2கி,லி) தெளிக்க வேண்டும்.

வெங்காயம்

ஊதா கொப்புள நோய் வெங்காயம் பயிரிடும் பகுதிகளில் காணப்படுகிறது. இந்நோயை கட்டுப்படுத்த வயலை நீர் வடியுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். காப்பர் ஆக்ஸி குளோரைடு காப்பர் 2.5 கி,லி (அ) குளோரோதாலோனில் 2கி,லி (அ) மான்கோசெய் 2கி,லி  இலை தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

தக்காளி, கத்தரி, வெண்டை, வெள்ளரி மற்றும் பூசணி வகைகள் போன்ற காய்கறிப் பயிர்களில் வேர்முடிச்சு மற்றும் மொச்சை வடிவ நூற்புழுக்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பை  ஏற்படுத்துகிறது. செடிகளுக்கு போதிய அளவு நீர் மற்றும் உரம் இட்டிருந்தாலும் பகல் நேரங்களில் வாடிக் காணப்படும். நூற்புழுக்கள் தாக்கப்பட்ட பயிர்களின் வேர் பகுதிகளில் “வேர் முடிச்சுகள்;” காணப்படும். இதனை கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்கு எக்டருக்கு 400  கிலோ இடுதல் மற்றும் கேந்தி பயிரை ஊடுபயிர் செய்தல், மேலும் ஓரு எக்டருக்கு 2.5 கிலோ பர்புரிரோசிலியம் லில்லாசினம் (பெசிலோமைசஸ் லில்லாசினஸ்) உயிரினக் கலவையை 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து 15 நாட்களுக்கு நிழலில் வைத்து காலை, மாலை நேரங்களில் நீர் தெளித்து பின்னர் வயலில் இடவும்.

கேரட் 

கேரட் பயிரை வேர்முடிச்சு நூற்புழுக்கள் மலைப்பகுதிகளான ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களில் 15-20 சத மகசூழல் இழப்பினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நூற்புழுக்கள் தாக்கப்பட்ட செடிகள் பகல் நேரங்களில் வாடியும் கிழங்கின் மேற்பரப்பிலும் பக்க வேர்களிலும் “முடிச்சுகள்” உண்டாகும். தாக்குதல் அதிகரிக்கும் போது கிழங்குகள் ‘கவட்டை’ போன்று காணப்படும். இதனை கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்கு எக்டருக்கு 400  கிலோ இடுதல் மற்றும் கேந்தி பயிரை ஊடுபயிர் செய்தல் மேலும் ஓரு எக்டருக்கு 2.5 கிலோ பர்புரிரோசிலியம் லில்லாசினம் (பெசிலோமைசஸ் லில்லாசினஸ்) உயிரினக் கலவையை 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

மல்லிகை மலர்

வேர் அழுகல் நோய் : கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் மல்லிகை மலர் பயிரில் தோன்றும் வேர் அழுகல் நோய் ஸ்க்ளிரோசியம் ரால்ப்சி என்னும் பூஞ்சாணத்தினால் ஏற்படுகிறது. இந்நோய் நோய் காரணிகள் மண்ணின் மூலம் மற்றும் வாய்க்கால் தண்ணீரின் மூலம் பரவும். ஆகவே, நோய் தாக்கப்பட்ட முற்றிலும் வாடிய செடிகளை அகற்றி அழித்தல். மேலும், நோய் பரவாமல் தடுக்க நோய் தாக்கப்பட்ட செடி மற்றும் அதனை சுற்றியுள்ள செடிகளில் மண்ணில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம், லிட்டர் அல்லது டிரை்ளாக்ஸிஸ்ட்ரோபின் ரூடெபுகோனசோல் 0.75 கிராம், லிட்டர் அல்லது டைபன்கோனசோல் 0.5 கிராம், லிட்டர் கலந்து செடிகளின் அடிபாகத்தில் இட வேண்டும். இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பின்பு  உயிர் நுண்ணுயிரியான டிரைக்கோ டெர்மா அஸ்பார்லம் (2.5 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் செடிகளை சுற்றி (100 -  150 கிராம்) இடவும்.

தோட்டக்கலை பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளில் தாக்குதல்

தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழலில்; மாவுப்பூச்சி, இலைபேன், வெள்ள ஈக்கள் மற்றும் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  எனவே விவசாயிகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க  ஏக்கருக்கு 5 மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகள்  வைத்தும் தாக்குதல் அதிகம் காணப்படின 1 லிட்டர் நீரில்  50 கிராம் வேப்பங் கொட்டை  கரைசல்  அல்லது 30 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து   தெளிக்க வேண்டும்.

தென்னை சுருள் வெள்ளை ஈக்கள்

தஞ்சாவூர், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பு தென்படுகிறது. வெள்ளை ஈக்களுடன் என்கார்சியா, கிரைசோபா மற்றும் பொறிவண்டுகள் சேர்ந்து காணப்படுகிறது. இயற்கை எதிரிகளான இவை பூச்சிகளை கட்டுப்படுத்தும். என்கார்சியா ஒட்டுண்ணிகளை பாதுகாத்து அவற்றின் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தேவைப்பட்டால் இந்த இயற்கை எதிரிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டு வெளியிடலாம். 

மஞ்சள் நிறத்தில் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடைய, மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்படும் ஒட்டும் பொறிகள் (3 அடி நீளம், 1 அடி அகலம்) ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில், ஆறு அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைக்கலாம். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க, இலை மட்டைகளிலுள்ள ஒலைகளின் அடிப்பகுதியில் தண்ணீர் தெளிக்கலாம். மேலும் மஞ்சள் நிற விளக்குப் பொறி பயன்படுத்தலாம்.

‘கிரைசோபிட்’ இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால், ஈ தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விடலாம். ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணை 30 மி.லி., கலந்து தென்னை ஒலையின் அடிப்பகுதியில் தெளிக்கவும். கரும்பூசாணத்தை நிவர்த்தி செய்ய, மைதாமாவு கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு, 25 கிராம்) ஒலைகளின் மேல் தெளிக்கவும் இவ்வாறு செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...