ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி மற்றும் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி மற்றும் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவையில் ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் மூன்று நாட்கள் கோவையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இன்றைய விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, கூறியதாவது, கோவையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 12 பேர் மட்டும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. கோவையில் மொத்தம் 50 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதில் 35 பேர் ஆஜராகியுள்ளனர். இனிமேல் ஆணையம் விசாரிக்க விரும்பும் சிலருக்கு மட்டும் சம்மன் அனுப்பப்படும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட கார்த்திகேய சிவசேனாபதி, நடிகரும், இசையமைப்பாளருமான ’ஹிப் ஆப் தமிழா’ ஆதி ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர். கோவையில் உதவி ஆணையர் ரமேஷ்குமார் நேற்று 5.30 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அடுத்ததாக, மதுரையில் விசாரணை நடத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை முன்நின்று நடத்திய, வாக்குறுதிகள் கொடுத்த சினிமா நடிகர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கின்றனர்.
மேலும், சென்னையில் ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என போலீஸ் உயர்அதிகாரிகள் தற்போது வரை கூறி வருகின்றனர். இது, தீவைத்த பெண் காவலரை மறைப்பதாகவே தெரிகின்றது. போலீஸாரிடம் விசாரணை நடத்தும் போது அவர்களிடம் இது குறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.