கோவையில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவை, ஜனவரி 27
கோவையில் முதல்முறையாக நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கார் அமைப்பு சார்பில் கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. செட்டிபாளையம் பகுதியில் நாளை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த வாரம் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநகர போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார் என 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.