கோவையில் 350 குழந்தைகள் பங்கேற்ற 'கலர் சேம்ப் 2018' ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது.
கோவை, ஜனவரி 26
கோவையில் 350 குழந்தைகள் பங்கேற்ற 'கலர் சேம்ப் 2018' ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது.

எஸ்.ஐ.பி. அகாடமி மற்றும் குளோபல்ஆர்ட் நிறுவனங்கள் இணைந்து ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிகளை நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று காலை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் 5-வது பிராந்திய ஓவியப்போட்டி நடைபெற்றது.

'கலர் சேம்ப் 2018' என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஓவியப்போட்டியில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை விவித் சர்வதேச பள்ளியின் நிறுவனரான கவிதா நந்தகுமார் மற்றும் குளோபல்ஆர்ட் இந்தியா அமைப்பின் வர்த்தக தலைவர் நம்ரதா முகர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், கவிதா நந்தகுமார் பேசுகையில், 'இந்த ஓவியப்போட்டியில் சிறு கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான எண்ணிக்கையில் குழந்தைகள் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. இது ஒரு சாதாரண ஓவியப்போட்டியல்ல. குழந்தைகளின் தனித்துவம் மிக்க எண்ணங்களைப் பறைசாற்ற உதவும் ஒரு நிகழ்வு. இத்தகைய போட்டிகள் வருங்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கையுடனும், சுதந்திரத்துடனும் வாழ்வதற்குப் பழகச்செய்யும்' என்றார்.

தொடர்ந்து, குளோபல்ஆர்ட் இந்தியா-வின் வர்த்தக தலைவர் நம்ரதா முகர்ஜி பேசுகையில், 'படைப்பாற்றல்களை வெளிப்படுத்த சரியான அடித்தளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டால், அவர்கள் வாழ்வின் அனைத்து சவால்களையும் தாண்டி வெற்றி பெரும் சூழல் உருவாகும். இதில் எங்கள் பங்களிப்பு திருப்திகரமாக உள்ளது' என்று பேசினார்.