கோவை காரமடைப் பகுதியில் 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் இருப்பதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போக்குவரத்து வசதிக்காக மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை காரமடைப் பகுதியில் 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் இருப்பதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போக்குவரத்து வசதிக்காக மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலை சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. சுற்றுலாத்தளமான ஊட்டிக்கு இந்த சாலை பிரதானமானது என்பதால் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இதில் பயணிக்கின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கோவைக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள் அனைத்தும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடை வழியாக செல்லும். அப்போது, அங்குள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை அடைந்தனர்.
இதனைப்போக்கும் விதமாக காரமடையில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, காரமடையில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளித்த தமிழக அரசு, இதற்காக ரூ. 39 கோடியே 77 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துது. இதனைத்தொடர்ந்து பாலம் கட்டும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. இதன் ஒப்பந்த காலம் 15 மாதம் ஆகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை.
இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் குமார் என்பவர் கூறுகையில், "இந்தப் பாலம் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால், இன்னும் முடியவில்லை. இதன் காரணமாக தினமும் 5 கிலோ மீட்டர் சுற்றி பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது, " என்றார்.

பாலம் கட்டும் பணி தொடங்கியதை தொடர்ந்து காரமடையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. கண்ணார்பாளையம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அதேபோல் கோவையில் இருந்து வரும் வாகனங்கள் மத்தம்பாளையம் வழியாக திருப்பிவிடப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"பாலம் கட்டும் பணி தொடங்கியதை ஒட்டி அதன் அருகே கடை வைத்திருந்தவர்கள் வியாபாரம் இல்லாமல் நஷ்டமடைந்தனர். இதனால், கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். சிலர் மாசு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். காரமடை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்," என்றார் சமூக ஆர்வலர் ஆரோக்கியசாமி.
நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் கூறும்போது, மேம்பால பணி வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இடையில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பாலம் வேலை பாதிக்கப்பட்டது. தற்போது 90 சதவிகித பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளது, என்றார்.
போக்குவரத்து தூரத்தையும், நெரிசலையும் குறைக்க ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.