இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, ஜனவரி 7
இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பி.என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவனை இழந்த இவர் தனியார் இணையதள திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார். இந்த நிலையில், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த புருசோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார். இவருக்கும் குமுதவள்ளிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், புருசோத்தமன் ஏற்கனவே இரண்டுமுறை திருமணமானவர் என்று குமுதவள்ளிக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புருசோத்தமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில், "புருசோத்தமனுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து குமுதவள்ளியை அவர் திருமணம் செய்துள்ளார். இதேப் போன்று 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.