டிசம்பர் 08
பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, டிசம்பர் 25 ஆம் தேதி சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
உளவு பார்த்ததாகக் கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை சிறைபிடித்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கச் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ள பாகிஸ்தான், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்கும் போது இந்திய தூதரக அதிகாரிகளுடன் உடன் செல்ல அனுமதி அளிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.