பகிரங்கமாக அதிகாரிகளை மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு குறைபாடுடன் செயல்படுகிறதா கோவை அரசு மருத்துவமனை?


கோவை, நவம்பர் 16

கோவை அரசு மருத்துவமனையானது கடந்த 1909-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  நூற்றாண்டை கடந்து இயங்கி வரும் இந்த மருத்துவமனையானது 13.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

கோவை மக்களை மட்டுமல்லாது அண்டை மாவட்ட மக்களின் உயிர்களையும் காப்பாற்றி வரும் இம்மருத்துவமனையால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இங்கு விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மற்றும் முட நீக்கியல் பிரிவு என மொத்தம் 42 மருத்துவத்துறைகள் உள்ளன.

நாளொன்றுக்கு சுமார் 8500 வெளி நோயாளிகளும், சுமார் 1400 உள் நோயாளிகளும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் குறைவால் அவ்வப்போது சில பிரச்சனைகள் இந்த மருத்துவமனையில் எழுந்தாலும், மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக சிகிச்சை அளிக்கும் சில துறைகளும் இங்கு இயங்கி வருகின்றன. 

நாள்தோறும் பிரச்சனைகள், உடற்கூறு ஆயுவுகளுக்கான சட்டப்பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக உள்ளது. 

மருத்துவமனை வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் காவல் துறை உதவி அறை (அவுட்-போஸ்ட்) அமைந்துள்ளது. அங்கு பணியில் இருக்கும் போலீசார் பெரும்பாலும் விபத்து மற்றும் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையே சேகரிக்கின்றனர். தவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. 

இந்த சூழலில், மருத்துவமனையின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் பாதுகாவலர்களை (செக்யூரிட்டிகளை) கொண்டு மருத்துவமனை வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்.

அதே நேரத்தில் செக்யுரிட்டி உடை அணிந்திருப்பவர்களின் பேச்சை மதிக்காமல் செல்வது நம்மில் சிலரின் வழக்கமாகவே உள்ளது. இந்த சூழலில், செக்யுரிட்டிகளின் அதட்டல்கள் எடுபடாமலே போகின்றன.

போலீசார் இல்லை, கேட்க ஆள் இல்லை என்ற தைரியம் சில சமூக விரோதிகளை மருத்துவமனை வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வைப்பதோடு, மருத்துவ அதிகாரிகளையே மிரட்டும் சூழலுக்கு வித்திட்டுள்ளது. 

ரகளை

மது அருந்திவிட்டு இம்மருத்துவமனைக்குள் வரும் சிலர் 'மப்பு' தலைக்கேற அங்கேயே படுத்துக்கொள்கின்றனர். அவர்கள் செய்யும் அசுத்தங்களே மருத்துவமனையின் அழகில் பாதியினை பழிவாங்கிவிடுகிறது. 

இதைத்தொடர்ந்து, சடலங்களை பெற வரும் உறவினர்கள் ஆம்புலன்சில் பிரேதங்களை ஏற்றுவதில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி அமரர் ஊர்தி ஓட்டுனர்களிடம் ரகளையில் ஈடுபடுகின்றனர். 

அதுமட்டுமன்றி சாலைமறியல், முற்றுகைப்போராட்டம் என பிரச்சனைகளின் மொத்த உருவமும் இங்கு அரங்கேறுகின்றன. 

மிரட்டல்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நள்ளிரவு 12 மணியளவில் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த விபத்து மற்றும் தீவிர சிகிச்சை வார்டுக்குள் செல்ல முற்பட்டார். 

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவ அதிகாரி அந்த நபரிடம், 'இந்த நேரத்தில் இங்கு எதற்காக வருகிறீர்கள், யாருக்கும் இந்த நேரத்தில் அனுமதி இல்லை' என்று கூற, கொதிப்படைந்த அந்த நபர் தன்னை தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் என்றும், ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் என்றும் கூறியதோடு, 'கேள்வி கேட்டால் பிரச்சனையே வேற' என்று வேற லெவலில் பதில் கொடுத்துள்ளார்.  மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவ அதிகாரியை தாக்க முற்பட்டுள்ளார். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, மருத்துவரை மிரட்டிய நபரை எச்சரித்து அனுப்பினர். 

ஆனால், இன்னும் பொதுமக்களிடம் அடாவடித்தனம் செய்பவர்களும், மருத்துவர்களை மிரட்டுபவர்களும் மருத்துவமனை வளாகத்திற்குள் 'காலரை' தூக்கிவிட்டு வலம் வந்துகொண்டே இருக்கின்றனர். 

இந்த நிலையில், பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் P. அசோகன்-இடம் விளக்கம் கேட்டோம்.



அதற்கு பதிலளித்த அவர், 'இந்த மருத்துவமனை வளாகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிரத்யேகமான காவல் நிலையம் ஒன்றை அமைத்துத் தர தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கை பரிசீலனையில் உள்ளது' என்றார். 

நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் வந்து செல்லும் இப்பகுதிக்கு கூடுதல் பாதுகப்பு அளிப்பது மிகவும் அவசியமாகவே உள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களையும், மருத்துவ ஊழியர்களையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் காவல் நிலையம் ஒன்றை அமைத்துத் தருவது அனைவருக்கும் நலமாக அமையும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...