நவம்பர் 9: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி, தினகரன் மற்றும் சசிகலா உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போதய தகவலின் படி 190 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிய வருகிறது.அதில் சசிகலாவின் எல்லா உறவினர்கள் வீடுகளும் அடங்கும் . கொடநாடு எஸ்டேட் உட்பட அ.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஜெயா டிவி தொடர்புடைய இடங்கள், ஜெயா டிவியை நிர்வகித்து வரும் விவேக், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகள், கோடநாடு எஸ்டேட் என ஏராளமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதனால் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, தினகரன் அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக்கிற்கு சொந்தமான இடங்கள், திருவாரூரில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீடு, சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அதிமுக சசிகலா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

ஜெயா டிவி மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் ஒரே சமயத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.