இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை, முதலில் துடியலூர் போலீஸார் விசாரித்து வந்தனர். அதில், முன்னேற்றம் இல்லாததால் அந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பல்வேறுகட்ட விசாரணைக்குப் பிறகு கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், முபாரக் மற்றும் சதாம் ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இதில் சதாம் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் (33) என்பவரை, சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர்.

சதாம் கைதுக்குப் பிறகு, சுபேர் பாலக்காட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார். இதனிடையே, தனது மனைவியைப் பார்க்க கிணத்துக்கடவு ரயில்வே கேட் அருகே வந்த சுபரை போலீஸார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 1.20 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.