ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்றுடன் (செப்.,22) ஓராண்டு முடிவடைகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில்தான் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த தினத்தை அ.தி.மு.க. தொண்டர்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உடல்நிலையில் என்ன பாதிப்பு, அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்தாமலே 74 நாட்கள் கழிந்தது. கடைசியில் டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணம் அடைந்த தகவல் வெளியானது. ஜெயலலிதா மீண்டு வந்து விடுவார் என்றே அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் நினைத்தனர். இதனால், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் அவர்களுக்கு இடி விழுந்தது போல் இருந்தது.
இதனிடையே, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய தினம், அதாவது செப்டம்பர் 21-ந்தேதி காலை இறுதியாக அரசு விழா ஒன்றில் அவர் பங்கேற்றார். கடந்த ஆண்டு இந்த நாளில் சென்னை சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் விழா ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார். சின்னமலையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு நின்று கொடி அசைத்தார்.
ஜெயலலிதா பச்சை நிறச்சேலையில், பச்சைக் கொடி காட்டி மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் அந்த காட்சியை பொதுமக்கள் அகண்ட திரையில் கண்டு களித்தனர். ஜெயலலிதாவை பொதுமக்கள் பார்த்த கடைசி விழா அதுதான். அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தலைமை செயலகத்துக்கு வந்தபோது ஜெயலலிதா மிக, மிக தளர்ச்சியாகத்தான் காணப்பட்டார். சக்கர நாற்காலியில்தான் அவர் வந்தார். என்றாலும் அவர் முகத்தில் மட்டும் அதே புத்துணர்ச்சியும், மலர்ச்சியும் குறைவின்றி காணப்பட்டது.
முதலில் அவர் சின்னமலையில் நடந்த மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் வெங்கய்யா நாயுடுவுடன் சேர்ந்து கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் சின்னமலைக்கு செல்வதை ரத்து செய்து விட்டு, தலைமை செயலகத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல.. தேசிய அரசியலிலும் அவர் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இதனால்தான் அவர் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதை அனைவரும் உணர்கிறார்கள்.
68 வயது வரை வாழ்ந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்திருப்பார். அவர் உடல் நலம் பாதித்த இன்றைய நாள் (செப்.,22) அ.தி.மு.க.வினருக்கு கருப்பு நாளாகும். அ.தி.மு.க.வினருக்கு ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஏற்படுத்திய நாள், விடை காண முடியாத மர்மங்கள் சூழ்ந்த நாள் என்றும் சொல்லலாம்.
ஜெயலலிதா மீண்டு வந்து விடுவார் என்றே அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் நினைத்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் அதிர்ச்சியோடு அவர்களிடம் கேள்விக்குறிகளையும் ஏற்படுத்தியது. ஜெயலலிதா எதனால் திடீர் என மரணத்தை தழுவினார்? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஏன் மூடி மறைத்தனர்? 74 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தபோது உண்மையில் என்னென்ன நடந்தது?
இத்தகைய மர்மங்களுக்கு இன்னமும் முழுமையான விடை கிடைக்கவில்லை.
ஜெயலலிதா உடல் நல விஷயத்தில் ஏற்பட்ட மர்மங்கள் தொடர்ந்து மர்மங்களாகவே நீடிக்கின்றன. அவர் மறைந்து சரியாக ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில் உண்மைகள் வெளிவருமா? பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் நம்பிக்கை இல்லாமல் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.