சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் ஊழல் இருப்பதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் சோமனூர் பேருந்து நிலைய விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன் சிங் பேடி தலைமையில் தனி நபர் விசாரணை குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில், இது போன்ற சம்பவங்கள் வரும் காலகட்டத்தில் நடைபெறாமல் இருக்க ககன்சிங் பேடி கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 15) விசாரணை மேற்கொள்ள உள்ளார்.
இந்த விசாரணையில் பொதுமக்கள் கலந்து கொண்டு விசாரணை குழுவிடம் நேரிலோ அல்லது மனு மூலமாகவோ கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.