தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 13-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடத்தியது. காஞ்சிபுரத்தில் நடந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடிப் பேசினார்.
திமுகவின் இந்தப் போராட்டத்திற்கு மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி. நாளை (செப்.,15) அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திமுகவிற்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.