கோவை, ராஜவாய்க்கால் பகுதியில் வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றின் ஓரத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு ஆற்றங்கரை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரியத்தினர் அப்பகுதி மக்களை வெள்ளலூர் பகுதியில் குடியேற்றம் செய்து இன்று காலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை துவங்கினர்.

கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அங்கு குடியிருப்போருக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி நீர்நிலைகளை மீட்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அறிவித்தது. அதற்காக, கோவையில் வெள்ளலூர், மலுமிச்சம்பட்டி, பிள்ளையார்புரம், உக்கடம் கழிவுநீர்ப்பண்ணை, கீரணத்தம் போன்ற பகுதிகளில் குடிசைமாற்று வாரியத்தால் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அதில் பல குளறுபடிகள் உள்ளன. ராஜவாய்க்கால், சுண்ணாம்புக் காலவாய், அணைமேடு, குறிச்சிப் பிரிவு, நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதிகளில் சுமார் 1,500 வீடுகள் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு ராஜவாய்க்கால் பகுதியில் 500 வீடுகளுக்கு மேல் உள்ளது. வாய்க்காலுக்காக கட்டப்பட்ட மதகுகளின் மேற்புறப் பகுதி, இந்த 2 குடியிருப்புகளையும் இணைக்கும் சிறு பாதையாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் வரும் வெள்ளம் வழியோரக் குடியிருப்புகளை மூழ்கடித்துவிடும். அப்படி பலமுறை நடந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி கூறுகையில்; ராஜவாய்க்கால், அணைமேடு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் 354 பேருக்கு வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வழங்கியுள்ளோம். நான்கு மாதங்களுக்கு முன்பு இதற்கான முன்னறிவிப்பினை நோட்டீஸ் மூலம் அறிவுறுத்திருந்தோம். அதன்பிறகு ஒரு மாதத்திற்கு முன்பு இப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்க செய்து இன்று காலை இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள் துவங்கப்பட்டது. இதில், மூன்று ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது' என்றார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘நாங்கள் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துவிடும். எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் வெள்ளலூர் பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.36 ஆயிரம் கொடுத்துள்ளோம். இங்கு தெருவிளக்குகள் பொருத்தப்பட்டும் எரிவதில்லை. இன்னும் இப்பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் ஒன்று கூடி பேசவுள்ளோம்' என்றனர்.
அதிகாரிகளுக்கு நன்றி:-
வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் செல்லும் ராஜ வாய்க்கால் மீது நாற்பது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களுக்கு தகுதியான வீடுகள் வழங்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பின் பலமுறை மாவட்ட நிர்வாக்திற்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலமாக அனைத்து துறை அலுவர்களையும் ஒருங்கிணத்து ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடைபெற்றது.
அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது ராஜவாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருவதற்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் குடிசை மாற்று வாரிய கோவை மண்டல தலைமை அதிகாரி ராஜசேகர், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்திகேயன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.