டி.டி.வி.தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார் எனவும் அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிச் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"நாங்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் விசுவாசிகளை டி.டி.வி.தினகரன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகின்றார். இது செல்லாது. தினகரன் உத்திரவிற்கு அதிமுக கட்டுப்படாது. தனியாக தினகரன் பேரவை என துவங்கி அதில் உள்ளவர்களை நீக்கட்டும்.
தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்களை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். நாஞ்சில் சம்பத் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மேகதாது விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டனர். தினகரனால் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் எதுவும் செல்லாது". இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.