கோவை மாவட்டம் மதுக்கரை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 18 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதங்களையும் ஏற்படுத்தி வந்தது. மேலும், 3 வளர்ப்பு மாடுகளையும், 1 ஆடுவையும் இது தாக்கியது.
இதனைத்தொடர்ந்து, இந்த யானை கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுத்து காட்டுக்குள் விரட்டும் முயற்சியாக கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த யானை மதுக்கரை அருகேயுள்ள அய்யாசாமி மலைப்பகுதியிலேயே சுற்றி வந்தது.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அந்த யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வனக்கோட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்து இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், யானை இறந்த இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. அதற்கான போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருகின்ற சட்டப்பேரபை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்" என தெரிவித்தார்.