மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600 பெண்களுக்கு சுமார் 3 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் நியியுதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற நிலையை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கடந்த 2011 ம் ஆண்டு முதல் இதுவரை தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 27 ஆயிரத்து 563 பெண்களுக்கு சுமார் 131 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தங்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், அம்மன் அர்ச்சுனன், சூலூர் கனகராஜ் மற்றும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ஆறுகுட்டி, அருண்குமார், சின்ராஜ் என அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியல் கேள்விகளை தவிர்க்குமாறு அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார்.