காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை அங்கன்வாடி ஊழியர்கள் திரும்ப பெற்றுக் கொண்டனர். சென்னையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவை: காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் குறித்து சென்னையில் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதா ஜீவன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர். முன்னதாக கோவை எம்.பி. PR. நடராஜன், தொடர்ந்து போராடிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை கைத்தட்டி வரவேற்று முழக்கங்களை எழுப்பினர்.