திருப்பூரில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் மே.3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான நோட்டீஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர்: மே 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் பல்வேறு சிறப்புகளை உடையதாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
குறிப்பாக தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ஒரு விதமாகவும் நடந்து கொள்வது ஒரு விதமாகவும் இருக்கிறது. இவை எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் தனியார்மயம் கொண்டு வரப்பட மாட்டாது என அறிவித்திருக்கக்கூடிய நிலையில், தற்போது அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க இருக்கும் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள பண பலன்களை விடுவித்து ஊழியர்களுக்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மூன்றாம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நோட்டீஸ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.
15 நாட்களுக்குள் தொழிலாளர் துறையும் தமிழக அரசும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு காணப்பட வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கையே திமுக அரசு பின்பற்றுவதாக சந்தேகம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கைகள் நியாயமானது என்பதால் மற்ற தொழிற்சங்கத்தினரும் இதற்கு முழு ஆதரவு அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.