ஆன்லைன் ரம்மி தடைச் சட்டமானது, நீதிமன்றத்தில் அது செல்லுபடி ஆகக்கூடிய சட்டமா? என்றுதான் ஆளுநர் கேட்டுள்ளார். இதே கேள்வியை நீதிமன்றம் கேட்டால் தமிழக அரசு அல்லது தந்தை பெரியார் திராவிட கழகம் சாம்பல் அனுப்புமா?. சாம்பல் அனுப்பு போராட்டம் போன்ற எந்த போராட்டம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும் என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை: பாஜக மகளிர் அணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பெயரில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சாய்பாபாகாலனி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மக்களை ஏமாற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை வேறுபாடு என்பதே கிடையாது. திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி, சொல்லும் வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை ஐடி விங்க் குலைத்துவிடும் என்று கூறினால், மாநிலத்தின் முதலமைச்சர், அவர்களுடைய காவல்துறை மீது நம்பிக்கை இழந்து உள்ளாரா? தன்னுடைய சொந்த அமைச்சர்களைகூட கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினால் எதற்காக எதிர்க்கட்சிகள் மீது பாய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு மிக முக்கியமான காரணம் திமுகவில் இருக்கின்ற முக்கியமான அமைச்சர்கள், தலைவர்கள், முதலமைச்சரிடம் பேசிய பேச்சுக்கள்தான்.
கோவையில் கூட இரு தினங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது அதில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் அது நியாயமானதுதான். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு என்ன காரணம்? கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் இது ஏன் நடக்கிறது? என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்றால் முதலில் முதல்வர் அவருடைய பேச்சில் கவனம் வைக்க வேண்டும். அமைச்சரவை சகாக்கள் என்ன பேசுகிறார்கள்? அதன் விளைவு எவ்வாறு இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும். அதைவிட்டு ஐடி விங்கை ஏன் கூறவேண்டும்? ஐடி விங்க் நினைத்தால் அரசாங்கத்தை தூக்கிப்போட முடியுமா? எனவே முதல்வர் முதலில் அவர்களுடன் இருப்பவர்களிடமிருந்து அவரையும் அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதிமுகவில் இருக்கக்கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது ஒரு சிக்கலை உருவாக்கும். ஆனால், இதையெல்லாம் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் ஜேபி நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது, தங்கள் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து இதுபோன்று விரும்பத் தகாத விஷயங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். எனவே வருகின்ற காலத்தில் இவை அனைத்தும் சரியாகிவிடும் என நம்புகிறோம்.
கோடை காலம் வரும் முன்பே கேரளா அரசாங்கத்திடம் பேசி சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், தற்பொழுது கோடை காலம் வரும் முன்பே அங்கு நீர்மட்டம் குறைந்துள்ளது. இது முழுக்க முழுக்க இவர்களுடைய சுயநலத்திற்காக எந்த பிரச்சினையும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக கோவையில் ஏதேனும் பிரச்சினை என்று சொன்னால் எந்த கவனத்தையும் கொடுப்பதில்லை. இன்னும் கோவை மீது உள்ள வெறுப்பு அவர்களுக்கு தீரவில்லை என்று நினைக்கிறேன்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இந்த தடைச் சட்டம் கொண்டு வருகின்றபொழுது நாளை நீதிமன்றத்தில் அது செல்லுபடி ஆகக்கூடிய சட்டமா? என்பதைதான் ஆளுநர் கேட்டுள்ளார். இதே கேள்விகளை நாளை நீதிமன்றம் கேட்டால் தமிழக அரசு அல்லது தந்தை பெரியார் திராவிட கழகம் சாம்பல் அனுப்புமா?. சாம்பல் அனுப்பு போராட்டம் போன்ற எந்த போராட்டம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் இதனை கௌரவ பிரச்சினையாகப் பாராமல் சட்டரீதியாக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.