பல்லடம் அருகே காளி வேலம்பட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் ஜெபக்கூடத்தை அகற்றாவிட்டால் மாவட்ட அளவிலான போராட்டம் வெடிக்கும் என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட ஜெபக்கூடத்தை அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் தொழிற்சாலைக்கு என அனுமதி பெற்று கிறிஸ்துவ ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த ஜெபக்கூடத்தை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காளி வேலம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முன்னணி கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பேசியதாவது, சட்டவிரோதமாக முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வரும் இந்த ஜெப கூடத்தை அகற்றாவிட்டால் ஓரிரு நாட்களுக்குள் மாவட்ட அளவிலான மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.
மேலும் திமுக அரசு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகவும் கிறிஸ்தவர்களால் தான் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் போல சித்தரித்து வருகின்றனர். இதுபோன்று அனுமதி இல்லாமல் கட்டப்படும் கிறிஸ்துவ ஆலயங்களாலும், மதமாற்ற முயற்சிகளாலும் நமது கலாச்சாரம் சீரழியும் அபாயம் உள்ளது.
பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே மதமாற்ற பிரச்சாரத்தினை கிறிஸ்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மதமாற்றத்திற்கு அரசு வழி வகுத்தால் மக்களிடையே மிகப் பெரிய புரட்சி வெடிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.