கோவையில் 100 சவரன் நகை கொள்ளை வழக்கு - இளம்பெண்ணை பிடிக்க லுக்அவுட் நோட்டீஸ்!

கோவை புலியங்குளத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜேஸ்வரிக்கு கறிக்குழம்பில் தூக்க மாத்திரை கொடுத்து, ரூ.2.5 கோடி பணம் மற்றும் 100 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக உள்ள வர்ஷினி(26) என்ற பெண்ணை பிடிக்க போலீசார் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.



கோவை: ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றி கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையை பெண்ணை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். 

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கிரின் பீல்டு காலனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (63) என்பவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் வெங்கடேசன் 19 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2-வது மகள் வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில், ராஜேஸ்வரி மட்டும் தனியாக வசித்து வந்தார். 

ரியல் எஸ்டேட் தொழில் செய்த ராஜேஸ்வரிக்கு, கோவை சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி (26) என்ற இளம்பெண் தொழில் ரீதியாக கடந்த 3 வருசத்துக்கு முன்பு பழக்கமானார். அடிக்கடி ராஜேஸ்வரியிடம் தொலைப்பேசியில் பேசி நலம் விசாரித்திருக்கிறார். அன்பாக பேசியிருக்கிறார். இதன் பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலும் ராஜேஸ்வரிக்கு வர்ஷினி உதவி செய்துள்ளார். 

நிலத்தையும் சிலருக்கு விற்பனை செய்து கொடுத்துள்ளார் வர்ஷினி. நிலம் வாங்கி விற்கும் விவகாரங்களை பேசுவது மற்றும் அவரை அக்கறையாக பார்த்துக்கொள்வது போல் பேசுவது என்று வர்ஷினி அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அவ்வப்போது ராஜேஸ்வரிக்கு சாப்பாடும் கொடுத்து வந்துள்ளார். 

இதனால் ராஜேஸ்வரி முழுமையாக வர்ஷினியை நம்ப தொடங்கினார். தன்னுடைய மகள்கள் அருகில் இல்லாத நிலையில், தன் மகள் போல் கவனித்துக்கொண்டதாக கருதிய ராஜேஸ்வரிக்கு வர்ஷினியை மிகவும் பிடித்துவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வர்ஷினி சென்றிருக்கிறார். 

வர்ஷினி இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் வைத்து கொண்டு வந்திருப்பதாக கூறி ராஜேஸ்வரியிடம் சாப்பிட கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், ராஜேஸ்வரிக்கு மயக்கம் வந்திருக்கிறது. ஆனால் ராஜேஸ்வரியோ தூக்கம் தான் வருகிறது என்று நினைத்து வீட்டின் பிரதான அறையில் இருந்த ஷோபாவிலேயே படுத்துவிட்டார். 

இந்நிலையில் அறை மயக்கம் தெளிந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு எழுந்து பார்த்திருக்கிறார். அப்போது அவரது படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த வர்ஷினியை பார்த்து, என் பெட்ரூமுக்குள் ஏன் சென்றாய் என்று கேட்டிருக்கிறார். அப்போது சமாளித்த வர்ஷினி பாத்ரூமுக்கு சென்றதாக கூறியிருக்கிறார். இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த ராஜேஸ்வரி, தனது படுக்கை அறைக்கு சென்றிருக்கிறார் அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இவர் யார்?, இங்கு என்ன நடக்கிறது என்று வர்ஷினியை பார்த்து ராஜேஸ்வரி கேட்டிருக்கிறார். அதற்கும் வர்ஷினி எதையோ சொல்லி சமாளித்து அங்கிருந்து அந்த நபருடன் காரில் ஏறி சென்றுவிட்டார். 

இதற்கிடையே இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் சாப்பிட்டதில் மிகவும் சோர்வாக இருந்த ராஜேஸ்வரி, மீண்டும் தூங்கிவிட்டர். காலையில் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்து இருந்த ரூ.2½ கோடி ரொக்கப்பணம், 100 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேல் இருக்கும். 

இதையடுத்து உடனடியாக ராஜேஸ்வரி, வர்ஷினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகே தனக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார். 

பின்னர் நடந்த சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேரில் வந்து விசாரித்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் வர்ஷினி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருண்குமார் (37) என்பவர் உள்பட 4 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவர்களை தேடிய போலீசார் அருண்குமார், பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரவீன் (32), சுரேந்தர் (25) ஆகியோரை பொன்னேரியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம், 31 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனிடையே தலைமறைவாக உள்ள வர்ஷினி, அவருடைய கார் டிரைவர் நவீன்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடித்தால் தான் மீதி நகை மற்றும் பணத்தை மீட்க முடியும் என்பதால் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். குறிப்பாக அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு கோவை மாநகர போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...