கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிச்சாமி, அ.தி.மு.க.வின் பதவி திருத்தங்கள் குறித்த ஆதாராங்களை இன்று வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிச்சாமி, அ.தி.மு.க.வின் பதவி திருத்தங்கள் குறித்த ஆதாராங்களை இன்று வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, நேற்று அறிவிப்பு வெளியான உடனே செய்தியாளர்களை சந்தித்த போது கே.சி. பழனிச்சாமி கூறியதாவது :- எந்த இடத்தில் நான் கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் மீறினேன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். அ.தி.மு.க.வின் பதவித் திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. அப்படி இருக்கும் போது, அவர்கள் எப்படி என்னை நீக்க முடியும். நான் அந்த ஆதாரத்தைப் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளியிடுவேன். இவ்வாறு கூறினார்.
அதன்படி, இன்று அ.தி.மு.க.வின் பதவி திருத்தங்கள் குறித்த ஆதாராங்களை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கோவை லாலி சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை கே.சி.பழனிச்சாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு நான் அளித்த பேட்டியில் மாற்றம் இல்லை. எனது கருத்து உண்மை. வருகிற 30-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்தே ஒதுங்கி கொள்வேன். நிச்சயம் இவர்கள் அமைக்கப்போவதில்லை. இருவருக்கும் பணம், பதவி மட்டுமே முக்கியம். மத்திய அரசுக்கு பயந்து என்னைக் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். அனைவரும் கூறுவது போல அ.தி.மு.க. கடந்த ஒரு வருடமாக பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக உள்ளது என்பது முற்றிலும் உண்மையே.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவிடம் பேசிக்கொண்டு தான் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சசிகலா, தினகரன் ஆகியோரை மக்கள் ஆதரிப்பது அதிகரித்துள்ளது என்றால் அ.தி.மு.க.வில் உள்ள குறை என்ன என்பதை ஆராய இவர்கள் தயாராக இல்லை. நான் எந்த கட்சிக்கும், எந்த அணிக்கும் செல்லப்போவதில்லை. இன்னமும் நான் அ.தி.மு.க.விலேயே உள்ளேன். என்னை நீக்க இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. என்னை நீக்குவது என்றால் உறுப்பினர்களால் ஒரு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் என்னை நீக்கட்டும். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது நடவடிக்கை தொடர்பான எனது அதிருப்தியை கடந்த ஓராண்டாகவே கூறி வருகிறேன். தற்போது பலரும் மாற்று கருத்து, சிந்தனையுடன் தான் இருக்கிறார்கள்.
கட்சி தொடர்பாக இதுபோன்ற கருத்துக்களைத் தான் தெரிவிக்க வேண்டும் என எந்த ஒரு விதியையும் அ.தி.மு.க.வில் கூறுவதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகவும் எவ்வித கருத்துக்களை கூற வேண்டும் எனவும் தெரிவிக்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பதிலாக இக்கருத்து எனது சொந்த கருத்து என்று கூட அவர்கள் கூறியிருக்கலாம். ஆனால், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கி உள்ளதால் அதன் முழு காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும்.
நான் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிய மனு இன்னும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. நிச்சயம் அந்த மனு மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பேன். பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மாற்றினார்கள். அதை இன்று வரை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எனக்கு விளக்கம் தந்துள்ளது. பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அப்படி நடக்காதபோது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையே தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.