தூர்வாரப்படும் குளங்கள்: பாழாகும் பறவைகளின் வாழ்வாதாரம்

விழிப்புணர்வு இல்லாமல் குளங்களை சுத்தப்படுத்தும் தன்னார்வலர்களால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு இல்லாமல் குளங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உணவு, உடை, இருப்பிடம் என்ற இந்த மூன்றும் மனிதன் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இதில் உணவு மற்றும் உறைவிடம் மற்ற 5 அறிவு ஜீவன்களுக்கும் தேவைப்படுபவை. நகரமயமாதலால் விலங்குகளுக்கும், பறவைகளுக்குமான பெரும்பாலான உறைவிடத்தை மனித இனம் அழித்துவிட்டது. 

மீதமிருக்கும் இடங்களில் அவை ஒன்றிப்பிழைத்து வருகின்றன. ஆனால், புனரமைத்தல் அல்லது தூய்மைப்படுத்துதல் என்ற பெயரில் விழிப்புணர்வு இல்லாமல் அந்த வாழ்விடங்களை அரசு நிர்வாகமும், சில அமைப்புகளும் அழித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது குறித்து இயற்கை ஆர்வலரான உமேஷ் மருதாச்சலம் கூறியதாவது:- 



கோவை மாவட்டத்தில் 32 குளங்கள் உள்ளன. இந்த குளங்களை அழகுபடுத்தும் பொருட்டு சமீபத்தில் பல்வேறு குளங்கள் சீர்ப்படுத்தப்பட்டன. அப்போது, குளங்களுக்கு அருகேயுள்ள புதர்கள் அகற்றப்பட்டு அங்கு நேர்த்தியான படுகைகள் அமைக்கப்பட்டது. இதனால், குளக்கரையில் வாழும் பறவைகள் கூடுகளை இழந்து தவித்தன. 

வாழ்விடம்

குளக்கரையில் இருந்த செடி, கொடிகள் காணாமல் போனதால், குளத்தில் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையில் குளத்தை நம்பி வாழும் சின்ன சின்ன பறவை இனங்கள் கூடு கட்டி வசித்து வருகின்றன. இவை அளவில் 8 முதல் 10 செ.மீ வரை மட்டுமே இருப்பதால் கொக்கு, நாரை போன்ற மற்ற பறவை இனங்களைப் போல மனிதர்களின் கண்களுக்கு அகப்படுவதில்லை. ஆகாயத் தாமரையை தனது உறைவிடமாக மாற்றிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அதிலேயே வாழவும் பழகியிருந்தன. 

இந்த சூழலில், குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை சுத்தப்படுத்தும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் நடைபெற்று வருகிறது. பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஆகாயத் தாமரைகளை அகற்றுவதன் மூலம் நீர் உறிஞ்சப்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி இந்த செயலை செய்து வருகின்றனர். ஆனால், இது சரியான முறை அல்ல. அவ்வாறு செய்யும் தன்னார்வலர்கள் பல நூறு சின்னஞ்சிறு பறவைகளின் வாழ்விடத்தை அழித்து வருகின்றனர். 

ஆகாயத்தாமரை

பொதுவாக ஆகாயத்தாமரை சுத்தமான நீரில் வளராது. அசுத்தமான நீரிலே அவை வளர்கின்றன. மாநகர பகுதிகளில் உள்ள குளங்களில் பெரும்பாலும் மக்களால் வெளியேற்றப்படும் கழிவு நீரே தேக்கி வைக்கப்படுகிறது. இந்த கழிவு நீரை உறிஞ்சி நீரை சுத்தப்படுத்துவதற்காக இயற்கையால் வழங்கப்பட்டது தான் ஆகாயத்தாமரை. 

சுத்தமான நீர் தேக்கப்படும் குளங்களில் இந்த ஆகயத்தாமரைகளை நம்மால் பார்க்க முடியாது. இதற்கு புட்டுவிக்கி குளம் மற்றும் வேடபட்டி குளம் ஆகியவை மிகச்சிறந்த உதாரணங்கள். 

அவ்வாறு ஆகாயத்தாமரை குளங்களில் வளரக்கூடாது என்றால், குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்த பின்னரே குளத்தினுள் விட வேண்டும்.

இந்த சூழலில், அறிவியல் பூர்வ விழிப்புணர்வு இல்லாமல் ஆகாயத் தாமரைகளை அகற்றப்பட்டு வருகின்றது.

இதனால், அதில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், அதன் முட்டைகள் காணாமல் போய்விடுகின்றன. தப்பிப் பிழைக்கும் பறவைகள் மீண்டும் அந்த குளத்தின் வாசலருகே கூட வருவதில்லை. 

என்ன பிரச்சனை?

அவ்வாறு அந்த சின்ன சின்ன பறவைகள் இடம் பெயர்ந்துவிட்டால், நகரில் பூச்சிகள் தொல்லை அதிகரிக்கும். அதோடு சின்ன பறவைகளை உண்டு வாழும் பிணம் தின்னி பறவைகளும், பருந்துகளும் வராது. இதனால் பிணம் தின்னி பறவைகள் உண்ணும் எலிகள் அதிகரிக்கும். இந்த உணவு சங்கிலி தொடர்பு பாதிப்படையும் போது இயற்கையாக நடக்க வேண்டிய பல்வேறு முறைகள் நடைபெறாமல் மனித குலத்திற்கு ஆபத்தாக முடிவடையும். 

எனவே சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்தைப் பாதுகாக்க முனைப்பு காட்டும் அரசும், தன்னார்வலர்களும் அறிவியல் பூர்வமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, சூழலியல் மற்றும் உணவுச் சங்கிலி, இவற்றுக்கு இடையேயான தொடர்புகளை அறிந்து கொள்ள வேண்டும்." 

இவ்வாறு உமேஷ் கூறினார். 



இந்த நிலையில், கோவை நேச்சர் சொசைட்டி தனது ஆண்டறிக்கையில், ஆகாயத்தாமரைகள் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் அகற்றப்படுவது இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். 

எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பறவைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...