News
கோவை தடாகம் அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு - இரத்தத் தொற்றாக இருக்கலாம் என வனத்துறை தகவல்
SimpliCity News Team · 3 hours ago

Coimbatore: தடாகம் காப்பு காட்டுப் பகுதியில் ஒரு காட்டு யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது, அதன் பிரேதப் பரிசோதனையில் septicemia எனும் இரத்தத் தொற்றே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று, 25.11.2026 அன்று மாலை வேளையில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடாகம் காப்பு காடு வெளியே ஒரு காட்டு யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 26.11.2026 அன்று கோயம்புத்தூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மேற்பார்வையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் கோயம்புத்தூர் வனச்சரக அலுவலர், தமிழ்நாடு வன உயிரினக் குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கோயம்புத்தூர் மண்டலப் பணியாளர்கள், கோயம்புத்தூர் வனச்சரக களப்பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் மற்றும் சாடிவயல் யானைகள் முகாம் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரால் EDAF நெறிமுறையின்படி பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில், உயிரிழந்த பெண் யானையின் வயது சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் இருக்கலாம் எனவும், septicemia என்னும் இரத்தத் தொற்றினால் இறந்திருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், விரிவான ஆய்வகப் பரிசோதனை மற்றும் பகுப்பாய்விற்காக கால்நடை மருத்துவக் குழுவினரால் உடல் உறுப்புகள் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.