News
சரவணம்பட்டியில் குப்பை சேகரிக்கச் சென்ற பெண் தூய்மைப் பணியாளரை கடித்த வளர்ப்பு நாய் – உரிமையாளர் மீது வழக்கு
SimpliCity News Team · 8 hours ago

Coimbatore: குப்பை சேகரிக்கச் சென்ற பெண் துப்புரவு தொழிலாளியை வளர்ப்பு நாய் ஒன்று தாக்கி படுகாயப்படுத்திய சம்பவத்தில், நாயின் உரிமையாளர் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கணபதி ஜெயப்பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி லட்சுமி (வயது 59). இவர் கணபதி 29-வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி காந்தி நகர் 4-வது மற்றும் 5-வது வீதிகளில் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் குப்பை சேகரிக்கும் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி காலை 9 மணி அளவில் லட்சுமி வழக்கம் போல் குப்பை சேகரிப்பதற்காக காந்தி நகர் 5-வது வீதியில் உள்ள சண்முகசுந்தரம் என்பவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு கதவை திறந்து உள்ளே சென்ற போது, வீட்டிற்குள் கட்டிப்போடப்படாமல் அவிழ்த்து விடப்பட்டு இருந்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை வளர்ப்பு நாய் லட்சுமி மீது பாய்ந்து அவரது கால்களில் கடித்தது.
இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் நாயை பிடித்து கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் உரிமையாளரையும் தள்ளிவிட்டு மீண்டும் பாய்ந்த அந்த நாய், லட்சுமியின் வலது தோள்பட்டையில் நகங்களால் பலமாக கீறி காயப்படுத்தியது.
இதில் காயமடைந்த லட்சுமி முதலில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து லட்சுமி நேற்று அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் போலீசார் நாயின் உரிமையாளர் சண்முகசுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.