News
மேட்டுப்பாளையத்தில் நடைப்பயிற்சி சென்ற ஐடி ஊழியர் மீது பால் ஆட்டோ மோதி உயிரிழப்பு
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நடைபயிற்சி சென்ற ஐடி நிறுவன ஊழியர் ஒருவரை அதிவேகமாக வந்த பால் ஆட்டோ மோதி கொன்றது.
மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள செல்வபுரம் டேங்க் மேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம்(37). இவருக்கு சவிதா(30) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஜீவானந்தம் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் வழக்கமாக தனது வீட்டில் இருந்து அன்னூர் சாலை வழியாக தென்திருப்பதி நால்ரோடு வரை நடை பயிற்சி செல்வது வழக்கம். இதே போல் இன்று காலையும் தென்திருப்பதி நால்ரோடு வரை சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
செந்தில் மணல் அருகே நடந்து சென்ற போது அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ அவர் மீது பின்னால் பயங்கரமாக மோதியது. பின்னர், அவரை சற்று தூரம் இழுத்துச்சென்றது. இதில் ஜீவானந்தம் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் பால் ஆட்டோவை ஓட்டி வந்த சிராஜுதீன்(30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஊட்டியை சேர்ந்த சிராஜுதீன் அன்னூரில் இருந்து தனது லோடு ஆட்டோவில் பால் ஏற்றி வந்த போது திடீரென டயர் பஞ்சராகியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மோதியதில் ஜீவானந்தம் இறந்தது தெரியவந்துள்ளது.
இதனிடையே பால் ஆட்டோ மோதி ஜீவானந்தம் தரதரவென இழுத்து செல்லப்பட்டது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.