News
கோவை மண்டல அறிவியல் மையத்தில் சூப்பர்மூன் காணும் சிறப்பு நிகழ்வு
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மண்டல அறிவியல் மைய வளாகத்தில் சூப்பர்மூனைக் காணும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது, இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வானியல் அறிவியல் குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கோவை மண்டல அறிவியல் மையம் ஆகியவை இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், முழு நிலவு பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வான சூப்பர்மூனை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நேரடியாகக் கண்டு ரசித்தனர்.
நிகழ்வில் கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபாகரன் பேசுகையில், நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது நிகழும் இந்த சூப்பர்மூன் நிகழ்வின்போது, நிலவு வழக்கத்தை விட சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும் என்று தெரிவித்தார். இது போன்ற வானியல் நிகழ்வுகளை நேரில் காண்பதன் மூலம், வானியல் குறித்த மூடநம்பிக்கைகள் நீங்கி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை வளரும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கோவை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் மைய அலுவலர் லெனின் பாரதி பேசுகையில், சூப்பர்மூன் உருவாவதற்கான அறிவியல் காரணங்கள் மற்றும் நிலவின் சுழற்சி முறைகள் குறித்து மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியல் மையத்தின் இத்தகைய முன்னெடுப்புகள் மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கோவை மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.