News
"மன்னிக்கும் தன்மை இல்லாத தலைமை நீடிக்காது” – கோவையில் இபிஎஸ் கருத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
SimpliCity News Team · 3 hours ago

கோவை: மன்னிக்கும் தன்மையும் பெருந்தன்மையும் இல்லாத எந்தவொரு தலைமையும் நீண்ட காலம் நிலைத்து நின்ற வரலாறு கிடையாது என்றும், அதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்து பேசினார்.
பொள்ளாச்சியில் எஸ்.பி. வேலுமணியும் தானும் பங்கேற்ற திருமண விழா குடும்ப உறவினர் இல்ல நிகழ்ச்சி என்று தெரிவித்த செங்கோட்டையன், அந்த நிகழ்ச்சியில் தங்களது அணியைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்றதாகக் கூறினார். அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டு பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசினார்களே தவிர, அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ஜாக்பாட் அடித்தது யாருக்கு என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைத்து ஜாக்பாட் அடிக்கலாம் என நினைத்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், தற்போது அவரது முகத்திரை கிழிக்கப்பட்டு, திரை விலக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கும் காலத்தில் எந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.
யாரையும் நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், புரட்சித்தலைவர் என்பது வேறு, புரட்சித்தலைவி என்பது வேறு, எடப்பாடி என்பது வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இரண்டு கோடி தொண்டர்களில் எஸ்.பி. வேலுமணியும் ஒருவர்தானே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இரண்டு கோடி தொண்டர்கள் இல்லை என்று தான் கூறவில்லை என்றார். எஸ்.பி. வேலுமணி முக்கியப் பொறுப்பாளராக இருந்து, ஒருவர் முதலமைச்சராகவும் பொதுச்செயலாளராகவும் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர் என்றும், அவரது பங்களிப்பை மறந்துவிட்டு தற்போது பேசிக் கொண்டிருப்பதாகவும் செங்கோட்டையன் விமர்சித்தார். இதற்குக் காலம் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார்.
கொங்கு மண்டலத்தின் தளபதியாக எஸ்.பி. வேலுமணி இருந்து வரும் நிலையில், அவர் தற்போது இவ்வாறு பேசுவது குறித்த கேள்விக்கு, யாரையும் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்று செங்கோட்டையன் பதிலளித்தார். கொங்கு மண்டலத்தின் வெற்றி தளபதியின் கையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனித்துப் போட்டியிட்டபோதே 25 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பெருமை தமிழக வெற்றிக் கழகத்துக்கு இருப்பதாகக் கூறினார்.
கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை வெற்றி தளபதி தலைமையில்தான் பவானி வரும் என்றும், எடப்பாடி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.