News
சூலூர் அருகே எதிர்திசையில் தனியார் பேருந்து இயக்கம்: வாகனம் பறிமுதல், ஓட்டுநர் உரிமம் மூன்று மாதம் ரத்து
SimpliCity News Team · 4 days ago

Coimbatore: கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில், பயணிகளுடன் எதிர்திசையில் அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் உரிமமும் மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே கோவை - திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து ஒன்று, பயணிகளுடன் எதிர்திசையில் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேக் முகமது, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், செல்வகுமார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சார்பில் கோவை - திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து, பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் எதிர்திசையில் சென்ற வீடியோ வெளியாகியுள்ளதாகத் தெரிவித்தார். தனியார் வாகனங்கள் இதுபோன்று பலமுறை விதிமீறி இயக்கப்படுவதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஓட்டுநர்களுக்கு சில மாதங்கள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுவதால், மீண்டும் அதேபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 110-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக் முகமது வலியுறுத்தினார். போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால், வாகன உரிமையாளர்கள் அபராதத்தைச் செலுத்திவிட்டு மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே மற்றவர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுவரை கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே எதிர்திசையில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கனரக வாகனங்களும் இதுபோன்று இயக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது காவல்துறையும் போக்குவரத்துத் துறையும் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
கடந்த 16.11.2026 அன்று காலை சுமார் 08.30 மணியளவில், திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த TN 78 L 5599 என்ற பதிவெண் கொண்ட தனியார் பேருந்து, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பிரிவு அருகே அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் இயக்கப்பட்டது. மேற்படி பேருந்தின் ஓட்டுநர் சக்திவேல், பேருந்தை திடீரென வலதுபுறமாகத் திருப்பி, கோவை-பல்லடம் சாலையில் போக்குவரத்திற்கு எதிர்திசையில் ஆபத்தான முறையில் இயக்கியதால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அங்கிருந்த ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 872/2026 U/S 281 BNS r/w 184 of the Motor Vehicles Act ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படியான மேல் நடவடிக்கைகளுக்காகத் தற்போது சூலூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பேருந்தின் இயக்க அனுமதி உரிமத்தை ரத்து செய்யக் கோரி, காவல்துறை சார்பில் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும், போக்குவரத்திற்கு எதிர்திசையிலும் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலகம் கோவை தெற்கு அலுவலகத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதியில், கோவை முதல் திருப்பூர் மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனம் எண் 78 L 5599 எதிர் திசையில் ஆபத்தான முறையில் அதிவேகமாக பயணித்தது குறித்து சமூக வலைதளங்களில் புகார் வரப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அவர்களின் அறிவுறுத்தலின் படி, வட்டார போக்குவரத்து அலுவலர் கோவை தெற்கு அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. நடத்துநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு வார காலத்திற்கு புத்தாக்க பயிற்சி பெற்று வருமாறு நடத்துநருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேற்படி வாகனம் சூலூர் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.