News
கோவை நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி ஆஜர்; மூன்று சாட்சிகள் விசாரணை
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் 2019ஆம் ஆண்டு நடந்த மாவோயிஸ்ட் துப்பாக்கிச் சண்டை தொடர்பான வழக்கில், பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
தமிழக – கேரள எல்லைப் பகுதியான ஆனைகட்டி – அட்டப்பாடியில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மாவோயிஸ்ட் அதிரடிப்படை போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்த மாவோயிஸ்டுகளான தீபக் மற்றும் ஸ்ரீமதி என்ற ஷோபா ஆகியோர் அங்கிருந்து தப்பினர்.
இதையடுத்து, ஆனைகட்டி பகுதியில் பதுங்கியிருந்த ஸ்ரீமதியை 2020ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.