News
கோவை ஈ.ஏ.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி - மதுரா அக்ரோ பிராசஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை மதுக்கரையில் செயல்பட்டு வரும் மதுரா அக்ரோ பிராசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.
கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் 16.11.2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈ.ஏ.எஸ்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் இசட். ராபர்ட் கென்னடி, மதுரா அக்ரோ பிராசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வரதராஜன் மேலர்கோடு ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனமும் இணைந்து பல்வேறு கல்வி மற்றும் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள உள்ளன. முக்கிய நோக்கம், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளைத் தொழில்துறையின் நடைமுறைத் தேவைகளுடன் இணைப்பதாகும். வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களாக மாற்றுதல், தானியங்கி முறையில் இளநீர் தேங்காயைத் திறக்கும் தொழில்நுட்பம், உணவுப் பொருட்களின் சேமிப்புக் காலத்தை அதிகரித்தல் மற்றும் இளநீர் சார்ந்த ஆரோக்கிய பானங்களின் தரக் கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வேளாண் பொறியியல் மாணவர்களுக்கு நிறுவனத்தில் குறுகிய காலப் பயிற்சி, தொழிற்சாலை நேரடி பார்வையிடல் மற்றும் செய்முறைப் பயிற்சிக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட உள்ளன. இறுதியாண்டு மாணவர்களின் கல்வித் திட்டப் பணிகளுக்கு, மதுரா அக்ரோ நிறுவனத்தின் சார்பில் தொழில்நுட்ப வழிகாட்டுதல் அளிக்கப்பட உள்ளது. உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பானங்கள் தயாரிப்புத் துறையில் உள்ள நடைமுறைச் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் ஊக்குவிக்கப்பட உள்ளது.
உணவுப் பாதுகாப்பு, பேக்கேஜிங் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் மேம்பாடு தொடர்பாக தொழில்நுட்பக் கருத்தரங்குகள், சிறப்பு விரிவுரைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்படும். மேலும், தானியங்கி உற்பத்தி முறைகள், இயந்திரங்களின் அமைப்பு மற்றும் வேளாண் கழிவுகளை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுதல் உள்ளிட்ட அம்சங்களில் கல்லூரி பேராசிரியர்கள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நேரடி அனுபவமும், ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் கிடைப்பதுடன், கல்வி மற்றும் தொழில்துறை இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்பெறும்.
ஈ.ஏ.எஸ்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் டி.ஈ. சுஜாதா, செயலாளர் டி.ஈ. அஜித், தாளாளர் டி.ஈ. ஆதர்ஷ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பி.டெக். வேளாண் பொறியியல் துறைத்தலைவர் பி.கோகுல தீபன், உதவிப் பேராசிரியர் கே. ராஜபிரியன் மற்றும் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மையர்கள், துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.