News
கோவை போத்தனூரில் பைக் மோதி ஸ்கூட்டரில் சென்ற பெண் உயிரிழப்பு
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை போத்தனூர் ரோட்டில் அதிவேகமாக வந்த பைக் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில், ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை கரும்புக்கடை ஆப்பிள் கார்டனைச் சேர்ந்தவர் முகமது சேவியர் மகன் பெரோஸ்கான் (42). முன்தினம் இரவு 10.30 மணி அளவில் இவர் தனது மனைவி ஜன்னத்தில் பிர்தௌஸுடன் (37) சுசுகி ஸ்கூட்டரில் போத்தனூர் ரோடு கருப்பராயன் கோவில் அஸ்மா டிரேடர்ஸ் முன்பு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே திசையில் போத்தனூர் பாரத் நகர் சிவஜோதி இல்லத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ஹரிஹரன் (19) என்பவர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த பைக், பெரோஸ்கானின் ஸ்கூட்டர் மீது மோதியது.
இந்த மோதலில் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த ஜன்னத்தில் பிர்தௌஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற பெரோஸ்கானுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பெரோஸ்கான் அளித்த புகாரின் பேரில் கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் ஸ்டேசன் போலீசார், பைக் ஓட்டுநர் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.