News
‘Flight of Fantasy’ திட்டம்: சென்னையைச் சேர்ந்த 15 மாணவிகள் முதன்முறையாக விமானத்தில் கோவை பயணம்
SimpliCity News Team · 6 days ago

Coimbatore: சமூகத்தில் வாய்ப்புகள் குறைந்த குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகள் அளிக்கும் நோக்கில், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் இணைந்து செயல்படுத்தி வரும் 'Flight of Fantasy' திட்டத்தின் 6வது பதிப்பு கோவையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஸ்ரீ சர்வோதயா விடுதியில் தங்கியுள்ள 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 15 மாணவிகள் முதன்முறையாக விமானத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, கோயம்புத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
கோவைக்கு வந்த மாணவிகளுக்கு பிரபல அன்னபூர்ணா உணவகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜிடி அறிவியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு அம்சங்களை நேரில் அறிந்துகொண்டனர்.
இதையடுத்து, பெண்கள் மேம்பாடு குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி மெர்லிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் (ஐஜி) மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) ஆர்.வி. ரம்யா பாரதி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனைப் பெண்கள் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினர். தன்னம்பிக்கை, சுயமரியாதை, தலைமைப் பண்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
கோவையில் ஒரு நாள் முழுவதும் பல்வேறு அனுபவங்களைப் பெற்ற மாணவிகள், அன்று இரவு 8 மணிக்கு விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குத் திரும்பினர்.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திருமலைசாமி மற்றும் கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20 தலைவர் விஜய் ஆனந்த் ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், இந்த முயற்சி குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் செல்வதுடன் முடிந்துவிடுவதில்லை என்றும், அவர்கள் பெரிய கனவுகளைக் காணவும், வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடையவும் ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தனர். மாணவிகளின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் தங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளித்ததாகவும் கூறினர்.
ஒவ்வொரு ஆண்டும் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், வாய்ப்புகள் குறைந்த குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களையும், தன்னம்பிக்கையையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், விமானப் பயணம், அறிவியல் அருங்காட்சியகப் பார்வை மற்றும் சாதனைப் பெண்களுடனான கலந்துரையாடல் ஆகியவை மாணவிகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்தன.