News
கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா விற்பனை – 7 பேர் கைது
SimpliCity News Team · 6 days ago

Coimbatore: கோவை மாவட்டத்தின் துடியலூர், பீளமேடு, காட்டூர், கரும்புக்கடை, சிங்காநல்லூர், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வந்த 7 பேரை போலீசார் தனித்தனியாக கைது செய்தனர்.
கோவை, துடியலூர் இடையர்பாளையம் சாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கணபதி நல்லாம்பாளையம் தண்டாயுதபாணி வீதியைச் சேர்ந்த மருதாசலத்தின் மகன் கார்த்திக் (26) என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், கோவை பீளமேடு அவிநாசி சாலை சின்னியம்பாளையம் ராஜஸ்தானி மசாலா டீ கடை அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் பாலி மண்டியா சாலையைச் சேர்ந்த புண்டா ராமின் மகன் துங்கர் ராம் (38) என்பவரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் துளசியா பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்லிமின் மகன் ஜாகிர் (27) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.2 கிலோ எடை உள்ள 20 பாக்கெட் ஹான்ஸ் மற்றும் ஷிகர் பான்மசாலா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாகிரை கைது செய்தனர்.
கோவை கரும்புக்கடை புட்டுவிக்கி சாலை நூர் சேட் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கரும்புக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த பொன்னுக்கலையின் மகன் மணிகண்டன் (21) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கரூர் வெட்டிவயல் பகுதியைச் சேர்ந்த மணியின் மகன் குமார் (43) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. தற்போது இருவரும் சுந்தராபுரம் பழைய தண்ணீர் தொட்டி எல்.ஐ.சி. காலனியில் வசித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 262 கிராம் எடை உள்ள ஹான்ஸ் மற்றும் கூல்லிப் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து மணிகண்டன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் மகாத்மா காந்தி சாலை பார் அருகே உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி பகுதியைச் சேர்ந்த முத்துவின் மகன் வினித் (30) என்பவர் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 10 கிலோ 301 கிராம் எடை உள்ள 3,419 பாக்கெட் ஹான்ஸ், கூல்லிப், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வினித்தை கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கீழத்தெருவைச் சேர்ந்த குஞ்சு சுபாதத்தின் மகன் அருள்குமார் (50) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து 2 கிலோ 882 கிராம் எடை உள்ள 33 பாக்கெட் ஹான்ஸ், விமல், கூல்லிப் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஷியாம்குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.