News
கோவையில் இருவேறு சாலை விபத்துகள்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்
SimpliCity News Team · 7 days ago

Coimbatore: கோவையில் நிகழ்ந்த தனித்தனி சாலை விபத்துகளில் ஒருவர் உயிரிழக்க, இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை, சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த சரவணனின் மகன் சிவகுமார் (38), அவரது நண்பர் கோவை பேரூர் கோவில் வீதியைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் மோகன்குமார் (35) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு மோகன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த அவர்களுக்கு எதிரே, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் சுதர்சன் (24) ஓட்டி வந்த டெம்போ டிராவலர் வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த மோகன்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேலம் சூளைமேடு பெரியகவுண்டபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (36) கொடுத்த புகாரின் பேரில், மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சுதர்சனை தேடி வருகின்றனர்.
மேலும், கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் மருதநாயகர் வீதியைச் சேர்ந்த மாசாணத்தின் மகன் சத்யசீலன் (50) கடந்த 1-ந் தேதி காலை 7 மணியளவில் தனது மொபட்டில் கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் ஷோரூம் எதிரே மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டு இருந்தார். அதே திசையில் கோவை மலுமிச்சம்பட்டி குறிஞ்சி ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த முகமது ஹனீபின் மகன் முகமது சிக்கந்தர் ஹக்கீம் (42) ஓட்டி வந்த தனியார் பஸ், சத்யசீலனின் மொபட் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த சத்யசீலனின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.