News
சபரிமலை பக்தர்களுக்காக கோவை வழியாக சென்னை–கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்–நவம்பர் 18 முதல் இயக்கம்
SimpliCity News Team · 8 days ago

Coimbatore: சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரைக் காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே கோவை, சேலம், ஈரோடு வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்பு ரயில் சேவை 2026 நவம்பர் 18 முதல் 2027 ஜனவரி 21 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண் 06119 சென்னை சென்ட்ரல் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில், நவம்பர் 18, 2026 முதல் ஜனவரி 20, 2027 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3.10 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்குக் கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06120 கொல்லம் – சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில், நவம்பர் 19, 2026 முதல் ஜனவரி 21, 2027 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 10.40 மணிக்குக் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்குச் சென்னை சென்ட்ரலைச் சென்றடையும். இரு மார்க்கங்களிலும் தலா 10 முறை இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்த ரயில்களில் ஏசி 3 அடுக்கு எகானமி பெட்டிகள் இணைக்கப்படும். மேலும், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி மற்றும் சாஸ்தாம்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் இயக்க நேர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில் எண் 06119 சென்னை சென்ட்ரல் – கொல்லம் சிறப்பு ரயில், புதன்கிழமைகளில் ஜோலார்பேட்டைக்கு மாலை 6.18 மணிக்கு வந்து 6.20 மணிக்குப் புறப்படும். சேலத்திற்கு இரவு 8.03 மணிக்கு வந்து 8.05 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 9.15 மணிக்கு வந்து 9.25 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 10.03 மணிக்கு வந்து 10.05 மணிக்கும் புறப்படும். தொடர்ந்து, போத்தனூருக்கு இரவு 11.13 மணிக்கு வந்து 11.15 மணிக்குப் புறப்படும்.
மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் எண் 06120 கொல்லம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், வியாழக்கிழமைகளில் போத்தனூருக்கு மாலை 6.20 மணிக்கு வந்து 6.22 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 7.18 மணிக்கு வந்து 7.20 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 8.20 மணிக்கு வந்து 8.30 மணிக்கும், சேலத்திற்கு இரவு 9.27 மணிக்கு வந்து 9.30 மணிக்கும் புறப்படும். தொடர்ந்து, ஜோலார்பேட்டைக்கு இரவு 11.48 மணிக்கு வந்து 11.50 மணிக்குப் புறப்படும்.