News
கோவை உக்கடம் லாரிபேட்டையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்
SimpliCity News Team · 8 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், உக்கடம் லாரிபேட்டை பகுதியில் மழைநீர் தேங்காதவாறு மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் இரவு, பகலாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி மழைநீர் தேங்காதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம், லாரி பேட்டை பகுதியில் பருவமழை காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஆணையாளர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம், குப்பைகளை பொது இடங்களில் கொட்டாதவாறு உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டுமெனவும், தற்போது மழைக்காலம் என்பதால், உபயோகமற்ற பழைய டயர்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட தேவையற்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, துணை ஆணையாளர் ர.சரஸ்வதி, மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி ஆணையர்கள் முத்துசாமி, மகேஷ்கனகராஜ் (வருவாய்), செயற்பொறியாளர் ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ் (பொ), மாமன்ற உறுப்பினர் அகமது கபீர, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் ஜாஹீர் ஹூசைன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
