News
கோவையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மிதிவண்டிப் போட்டி: சீறிப்பாய்ந்த மாணவ, மாணவிகள்
SimpliCity News Team · 1 min ago

Coimbatore: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மிதிவண்டிப் போட்டியில் மாணவ, மாணவிகள் சீறிபாய்ந்து தங்களது சைக்கிளிங் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது.
வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டியை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நேரு விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி நடைபெற்ற போட்டியில், இலக்கை நோக்கி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் மிதிவண்டிகளில் சீறிபாய்ந்தனர். அது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டன. போட்டியை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
