News
கோவையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை–4 பேர் கைது; 6.8 கிலோ கஞ்சா, 300 போதை மாத்திரைகள் பறிமுதல்
SimpliCity News Team · 1 min ago

Coimbatore: கோவை மாவட்டத்தின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய தனித்தனி சோதனைகளில் மொத்தம் 6.8 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும், 300 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கரும்புக்கடை போலீஸ் ஸ்டேசன் போலீசார் கரும்புக்கடை ஆசாத் நகர் திறந்தவெளி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு தலையாடு அஞ்சல் செம்பகசேரி இல்லத்தைச் சேர்ந்தவரும், தற்போது பீளமேடு பிருந்தாவன் சர்க்கிள் ஜி.எம். பேக்கரி முதல் தளத்தில் தங்கியிருப்பவருமான சுகுமாரன் மகன் பிபின் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசன் போலீசார் அதிகாலை 5.10 மணி அளவில் சரவணம்பட்டி - லட்சுமி நகர் ரோட்டில் உள்ள இறைச்சி மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடை முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக நின்று இருந்த ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் கன்பாடா மாதாசாகி பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது கோவை வெள்ளனைப்பட்டி கோத்தம்பாளையத்தில் தங்கியிருப்பவருமான பிருந்தோபன் மாலிக் மகன் பிக்ரம் மாலிக் (38) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 1.416 கிலோ கஞ்சா, 20 பேக்கிங் கவர்கள் மற்றும் ஒரு பச்சை நிற பை ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
அதே சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசன் போலீசார், சரவணம்பட்டி கீரநத்தம் ரோடு சஹாரா சிட்டி ஆர்ச் பகுதியில் மற்றொரு சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மற்றும் வலி நிவாரணி போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த பீளமேடு காந்திமா நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் வொர்க்ஷாப் மணிகண்டன் என்கிற மணிகண்டன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.034 கிலோ கஞ்சா மற்றும் 300 டைட்டால் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசன் போலீசார் குனியமுத்தூர் மாநகராட்சி கழிப்பறை அருகே சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த குனியமுத்தூர் இடையர்பாளையம் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது குனியமுத்தூர் பெரிய பள்ளிவாசல் பின்புறம் திருமூர்த்தி நகர் வீதியில் வசித்து வருபவருமான சம்சுதீன் மகன் முகமது ஆகிப் (20) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், முகமது ஆகிப்பை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.