News
ஆன்லைன் பெண் தொழில்முனைவோர் குறித்து அவதூறு, மிரட்டல் – யூடியூபர் மணிகண்டன் கைது: கோவை சைபர் கிரைம் நடவடிக்கை
SimpliCity News Team · 5 hours ago

கோவை: கோவையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் மற்றும் யூடியூபரின் வீடியோக்கள், புகைப்படங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தி ஆபாச அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் திருச்செந்தூரைச் சேர்ந்த யூடியூபர் மணிகண்டனை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஊட்டியில் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் 16 குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவர், பல வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை சிவானந்தா காலனி, டாடாபாத் சிக்ஸ் கார்னர் பகுதியில் ‘நான் கற்றது Exclusive Store’ என்ற பெயரில் கடை நடத்தி வரும் கே. விக்னேஷ்வரி, ‘nan katrathu’ என்ற பெயரில் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இதில், தான் தயாரிக்கும் பொருட்களின் செய்முறை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்த வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24, 2026 முதல் திருச்செந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது ‘mani_history_mad’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ‘Tiruchendur Manikandan’ என்ற யூடியூப் சேனலிலும் விக்னேஷ்வரியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றிப் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அவரது தொழில் மற்றும் விற்பனைப் பொருட்கள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பியதுடன், ஆபாசமாக விமர்சித்து அவதூறு செய்ததாகவும், பெண்ணின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தி இழிவுபடுத்தியதோடு, “உன்னை இத்துடன் முடித்துவிடுவேன்” எனக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விக்னேஷ்வரி புகார் அளித்தார். இதனால் தனது தொழில் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நவம்பர் 13ஆம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சைபர் தடயங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில், திருச்செந்தூரைச் சேர்ந்த சங்கர நாயனார் மகன் மணிகண்டன் (37), நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் ஊட்டிக்குச் சென்று நவம்பர் 14ஆம் தேதி மணிகண்டனைக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.
காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையில் நடைபெற்ற தொடர் விசாரணையில், மணிகண்டன் மீது தமிழகம் முழுவதும் ஏற்கனவே 16 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பல வழக்குகளில் அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.